எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலினா?…கூட்டணித் தலைவர்கள் திடீர் முடிவு?…

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2022, 5:01 pm
Rahul Abroad - Upatenews360
Quick Share

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் அடிக்கடி வெளிநாடு செல்வது அரசியலில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்த விஷயம்.

ராகுலின் வெளிநாடு பயணம்

ஆனால் அவர் எந்த நாட்டிற்கு, எதற்காக செல்கிறார் என்பதெல்லாம் பரம ரகசியமாகவே இருக்கும். சில நேரங்களில் அவர் வெளிநாடு சென்ற பிறகுதான், இதுபற்றிய தகவலே காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கு தெரியவரும்.

இதெல்லாம் ராகுலின் தனிப்பட்ட விஷயம் என்றாலும் கூட சொல்லாமல், கொள்ளாமல் அவர் திடுதிப்பென்று அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பறந்து விடுவதுதான்
அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விடுகிறது.

109 முறை வெளிநாடு பயணம்!!

கடந்த 8 ஆண்டுகளில் மட்டும், ராகுல் 109 முறை வெளிநாடுகளுக்கு இப்படி ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார் என்றும் கடந்த 3 ஆயிரம் நாட்களில் அவர் 1200 நாட்கள் இந்தியாவிலேயே இல்லை என்றும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

2015-ம் ஆண்டு பிப்ரவரி 16-ல் ஆசிய நாடுகளுக்கு பயணம் கிளம்பிய ராகுல் 60 நாட்களுக்கு பின்புதான் நாடு திரும்பினார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதுவும் 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்பு, நினைத்தநேரத்தில் எல்லாம் ராகுல் வெளிநாடுகளுக்கு திடீர் பயணம் மேற்கொள்வது வாடிக்கையாகி விட்டது.
2019-ம் ஆண்டின் இறுதியில் மராட்டியம், அரியானா மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க இருந்த நேரத்தில் கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவதை புறந்தள்ளி விட்டு 5 நாட்கள் வெளிநாடு சென்றுவிட்டார்.

தோல்வி விரக்தியால் ஐரோப்பா பயணம்

இதேபோல் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி கண்டதால் விரக்தியடைந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு பறந்ததார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநில தேர்தல்களின்போது மற்ற கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் 2021 ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலிக்கு சென்ற ராகுல் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் வாரம்தான் நாடு திரும்பினார். இது மூத்த காங்கிரஸ் தலைவர்களை முணுமுணுக்க வைத்தது.

இரவு விடுதியில் ராகுல்

தவிர 5 மாநில சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இரவு விடுதியில் பொழுதை கழித்தது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.


.
மேலும் கடந்த மே மாதம் ராஜ்ய சபா தேர்தலில் அரியானா மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி ஓட்டு போடலாம் என்ற பிரச்சினை பூதாகரமாக வெடித்த நேரத்தில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு ராகுல் பயணம் மேற்கொண்டார்.

இப்படி காங்கிரஸ் கட்சியில் முக்கிய விவகாரங்கள், பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் அவர் வெளிநாடு செல்வது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

எங்கே போனார் ராகுல்

இந்த நிலையில்தான் ராகுல் கடந்த 12-ம் தேதி வெளிநாட்டுக்கு மீண்டும் பயணம் மேற்கொண்டுள்ளாா். அவா் எந்த நாட்டுக்குச் சென்றுள்ளாா் என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்தத் தகவல் கூட காங்கிரஸ் தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கையின் மூலம் தான் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு அவர் பயணம் சென்றிருக்கலாம் என்று டெல்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜூலை 12 ம் தேதி காலையில் வெளிநாடு சென்ற அவா் வரும் 17-ந் தேதி இந்தியா திரும்பிவிடுவாா். 18-ம் தேதி நடைபெறும் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்கப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இது ராகுல் காந்தியின் தனிப்பட்ட முறையிலான பயணம் என்பதால் அவா் செல்லும் நாடு, எதற்காக செல்கிறாா் என்பது தொடா்பான விவரங்கள் வெளியிடப் படவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் யாத்திரை

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது, வருகிற அக்டோபர் 2-ம் தேதி கட்சி சார்பில் தொடங்க இருக்கும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான “இந்திய ஒற்றுமை யாத்திரை” போன்ற விஷயங்களில் முக்கிய முடிவுகளை கட்சி மேலிடம் எடுக்க வேண்டிய நேரத்தில் ராகுல் வெளிநாடுக்கு பறந்துவிட்டார்.

கோவாவில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மாயமாகி திரும்பிய விவகாரத்தில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. இது போன்ற நிலையில் ராகுல் வெளிநாடு சென்றிருப்பதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

காணாமல் போன ராகுல்

ஏனென்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலை, ராகுல் தலைமையில்தான் காங்கிரஸ் சந்திக்க விரும்புகிறது. இதற்காக திமுக,தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகளையும் அக்கட்சி முன்னெடுத்து வருகிறது. எனவே பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்க எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் படாத பாடுபட்டு வரும் நேரத்தில் அவர் இப்படி நடந்து கொண்டால் எதிர்க்கட்சிகளிடமும், மக்களிடமும் எப்படி நம்பிக்கை வரும்? என்று அவர்கள் முணுமுணுக்கிறார்கள்.

கட்சியில் பிரச்சினைகள் இருக்கும்போதெல்லாம் ராகுல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை இதுவரை பாஜக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே விமர்சித்து வந்தன.

சமீபகாலமாக சொந்த கட்சியிலேயே வெளிப்படையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஆனாலும் ராகுல் எதற்கும் கவலைப்படாமல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

திமுகவுக்கு தலைவலி

அவருடைய இந்த ரகசிய பயணம் காங்கிரஸ் தலைமையில்தான் எதிர்க்கட்சி கூட்டணி அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ள திமுக, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

“ராகுலின் இது போன்ற திடீர் திடீர் பயணங்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இடையே குழப்பத்தையே ஏற்படுத்தும்” என்று டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

“காங்கிரஸ் கட்சி அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதன் முதலில் களமிறங்கியது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிதான். இதற்காக அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்தும் பேசினார்.

ஆனால் சரத் பவாரோ காங்கிரஸ் இல்லாத எதிர் அணியால் மோடி அரசை வீழ்த்துவது கடினம் என்று கூறி மறுத்துவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்ற திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் காங்கிரஸ் தலைமையில் எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதுதான் நல்லது. எனினும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்காக காங்கிரஸ் சில தியாகங்களை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

அரசியல் மீது அக்கறை உள்ளதா ராகுல்?

நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் 20 மாதங்களே உள்ள நிலையில், தீவிர அரசியலை முன்னெடுக்க வேண்டிய ராகுல் இப்படி அடிக்கடி வெளிநாடு போய் வந்தால் அவருடைய தலைமையில் எதிர்க்கட்சிகள் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட முடியும்? என்ற கேள்வி எழுகிறது. அதுவும் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டங்கள் நடைபெறும் போதெல்லாம் அதில் கலந்து கொள்ளாமல் வெளிநாடு செல்வதால் அவருக்கு உண்மையிலேயே அரசியல் மீது அக்கறை இருக்கிறதா? இல்லையா? என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது.

இந்தக் கேள்வியை யார் கேட்கிறார்களோ இல்லையோ, தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் ஆட்சிக்கட்டிலில் மட்டுமே அமர ஆசைப்படுகிறார் மக்கள் மீது அக்கறை கொள்வதில்லை என்ற விமர்சனத்தை பாஜக தலைவர்கள் நிச்சயம் முன்வைப்பார்கள். அது காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்.

காங்கிரஸ்க்கு நெருக்கடி

இதனால் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்பதில் உறுதியாக உள்ள காங்கிரசுக்கும், திமுகவுக்கும் தலைவலிதான் ஏற்படும். கடந்த ஒரு வருடமாக மம்தா கூறிவரும் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டணியை கூட ஏற்கலாம் என்ற சிந்தனை திமுகவுக்கு வரவும் வாய்ப்புண்டு. இதனால் தற்போது தேசிய அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வரும் திமுகவின் தலைமையில் அணி திரள மம்தா பானர்ஜி, சரத்பவார், லாலு பிரசாத், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, சந்திரசேகர ராவ், பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி முகமது உள்ளிட்ட தலைவர்கள் விரும்பும் நிலையும் உருவாகலாம்.

காங்கிரஸில் மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியா, ராகுல், பிரியங்கா குடும்பத்தினர் கட்சி மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்று வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராகுலின் அவ்வப்போதைய வெளிநாட்டு திடீர் பயணம் உள்கட்சியில் மேலும் எதிர்ப்பை சம்பாதிக்கவே செய்யும்.

திமுகவுக்கு சாதகம்

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் 18 எதிர்க்கட்சிகளும் இதையே காரணம் காட்டி, பிரதமர் வேட்பாளராக ராகுல் போட்டியிடவேண்டாம் என்று தங்கள் ஆட்சேபத்தையும் தெரிவிக்கலாம். மேலும் காங்கிரஸ் வலுவில்லாத மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் தொகுதி ஒதுக்கீட்டில் மிகுந்த கஞ்சத்தனம் காட்டுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் காங்கிரசை விட மாநிலக் கட்சிகளே அதிக வெற்றிகளை பெறும் நிலையும் ஏற்படலாம்.

இப்படி பல்வேறு கேள்விகளை ராகுலின் வெளிநாட்டு பயணம் ஏற்படுத்துவதால் எதிர்க்கட்சிகள் என்ன முடிவு எடுக்கப் போகின்றன என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் ராகுலுக்கு பாதகமாகவும், திமுகவுக்கு சாதகமாகவும் அமையும் என்று உறுதியாக சொல்ல முடியும்” என அந்த டெல்லி அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 421

0

0