துப்பாக்கி எடுப்போருக்கு துப்பாக்கியால் பதிலடி கொடுக்கப்படும் : கேரளாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2022, 10:27 am

ஆயுதம் ஏந்துபவர்களுக்கு ஆயுதம் மூலமே பதில் கொடுக்கப்படும் என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில் கொடுக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது.

ஆயுதக் குழுக்களுடன் கடந்த 8 ஆண்டுகளாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. சரணடைய விரும்பும் குழுக்களுடன் மட்டுமே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும். மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தபோது, நாடு முழுவதும் அதிர்ச்சி அடைந்தது.

ஒரு சில பயங்கரவாதிகளால் நாடு அவமானப்படுத்தப்பட்டது. தாக்குதல் நடந்த 9 மாதங்களுக்குள், அப்போதைய இந்திய பிரதமர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர், இரு நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறி கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டனர்.

என்ன இது? பாகிஸ்தான் நட்பு நாடா? அல்லது எதிரி நாடா? என்பதில் தெளிவே இல்லாமல் ஒரு ஒப்பந்தமா? புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாலகோட் வான்வழியில் நாம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தோம். பயங்கரவாதச் செயலை செய்தால் அதற்கான விலையை நீங்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் அந்த செய்தி. இவ்வாறு அவர் பேசினார்.

  • People from Tamil Nadu should not be allowed in Tirupati: Sudden demand! திருப்பதியில் தமிழக பிரதிநிதிகளுக்கு தரிசனம் வழங்கக்கூடாது : சந்தானம் படத்தால் வந்த வினை!