ஆர்.எஸ்.பாரதியின் ஆவேசம் அடங்குமா?…சமரச முயற்சியில் திமுக!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2022, 9:25 pm

கட்சித் தலைமையின் மீது இருந்த அதிருப்தியால் மூன்று மாதங்களுக்கு முன்பு திமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வரிசையில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதியும் இணைந்து விடுவாரோ? என்ற கேள்வி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஆர்எஸ் பாரதி ஆவேசம்

75 வயதாகும் ஆர். எஸ். பாரதிக்கு திமுகவின் மூத்த நிர்வாகி, மாநிலங்களவை முன்னாள் எம்பி, பிரபல வழக்கறிஞர் என்ற அடையாளங்கள் உண்டு. என்றாலும் கூட சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அவர் துடுக்குத்தனமாக ஏதாவது பேசுவது கட்சி தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். அப்படித்தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் நீதிபதிகள் குறித்தும், டிவி செய்தி சேனல்கள் பற்றியும் மிகக் கடுமையாக விமர்சித்து விட்டு பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்ட நிகழ்வும் நடந்தது.

இந்த நிலையில்தான் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு,
மறைந்த திமுக எம்பி., ஜின்னா தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று பேசியபோது, தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார்.

கட்சிக்கு உழைத்தும் பலனில்லை

அது, கட்சிக்காக நீண்ட காலம் உழைத்த நிர்வாகிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டுவது போல இருந்தது.

அவர் கொந்தளித்து பேசும்போது, ‘எனக்கு 69 வயதில்தான் எம்பி, பதவி கிடைத்தது. ஜின்னாவுக்கு 70 வயதில்தான் எம்பி பதவி கிடைத்தது.

நாங்க கொண்டு வந்து சேர்த்தவன் எல்லாம் மந்திரியாகி விட்டான், எம்.பி. ஆகிட்டான். அதுவேறு விஷயம். எங்களுக்கு காலதாமதமாகத்தான் பதவி வந்தது. காரணம், ஒரே கொடி, ஒரே தலைவர் என்று நாங்கள் மிக பொறுமையாக இருந்ததாலும் என்றாவது ஒரு நாள் பதவி வந்தே சேரும் என்பதாலும்தான்.

கடைசி வரை கட்சியில் இருந்தால் பதவி

இன்று நான் இதை சொல்வதற்கு காரணம், இளைஞர்கள். இன்று வந்திருக்கும் இளைஞர்கள் எல்லாம், நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம், அரசு பதவி கிடைக்கவில்லை, எங்களை எல்லாம் ஒதுக்கிட்டாங்க என்கிறார்கள்.

ஒதுக்குவாங்க; அப்படித்தான் நடக்கும். அதெல்லாம் ஜீரணித்து தான் கட்சியில் இருக்க வேண்டும். அப்படி இருப்பதற்கு தான் இவர் பாடமாக இருக்கிறார்; படமாக இல்லை. ஜின்னாவை போன்றவர்கள் நமக்கு பாடம். ஒரு கட்சிக்கு வந்துவிட்டால், இறுதிநாள் வரை பதவி வருகிறதோ, இல்லையோ இல்லையோ கட்சிக்கு விஸ்வாசமாக இருப்பவன்தான் உண்மையான தொண்டன். கடைசி வரை திமுகவின் தொண்டர் என்று சொல்வது தான் பெருமையே தவிர, வேறு கிரெடிட் எதுவும் கிடையாது” என்று பொங்கி இருந்தார்.

திமுகவினர் அதிர்ச்சி

அவருடைய இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி “திமுகவில் சேர்ந்தால் கடைசிவரை ஒருவர் தொண்டராகதான் இருக்க முடியும். அவர் காலமெல்லாம் போஸ்டர் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். கட்சியில் கடுமையாக உழைப்பவர்களுக்கு ஒரு போதும் எம்எல்ஏ, எம்பி பதவி கிடைக்காது” என்று அதிமுக, பாஜக கட்சிகளால் கேலியாக விமர்சிக்கப்படும் நெருக்கடியான நிலையும் திமுக தலைமைக்கு ஏற்பட்டது.

சமூக வலைத்தளங்களிலும் ஆர் எஸ் பாரதியின் பேச்சு பெரும் விவாத பொருளாக மாறியது. இதனால் திமுகவினர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

முதலமைச்சரின் மறைமுக பதிலடி?

இந்த நிலையில்தான் மகாபலிபுரத்தில் கடந்த ஞாயிறன்று நடந்த உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் இல்ல திருமண விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் போது,‘‘பதவி வரும், போகும், கழகம்தான் நம் அடையாளம், உயிர் மூச்சு, அப்படிப்பட்ட இயக்கத்தை உயிர் மூச்சாகக் கருதி உழைத்ததால்தான் 10 ஆண்டுக்குப் பின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்’’ என்று சூசகமாக குறிப்பிட்டார். இது அந்த
விழா மேடையில் இருந்த ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் அளிப்பது போலவும் இருந்தது.

அதன் பிறகு ஆர் எஸ் பாரதி, பெரிதாக எந்த ரியாக்சனும் காட்டவில்லை. அப்படியே அமைதியாகி விட்டார்.

சரி! திமுகவினரே குழப்பம் அடையும் விதமாக ஆர் எஸ் பாரதி எதற்காக இப்படி ஆதங்கப்பட்டு பேசினார்?… அதற்கு ஏதாவது பின்னணி உள்ளதா?… என்ற கேள்விகளுக்கு அரசியல் விமர்சகர்கள் கூறுவது இதுதான்.

மகனின் அரசியல் எதிர்காலம்

“தனது மூத்த மகனான சாய் லட்சுமிகாந்தின் அரசியல் எதிர்காலம் குறித்து ஆர் எஸ் பாரதி மிகுந்த கவலையில் உள்ளதால் இதுபோல பேசி இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

உள்ளாட்சித் தேர்தலின்போது மகனுக்கு கவுன்சிலர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. அதேபோல், அண்மையில் திமுகவில் இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டு, துரைமுருகன், பொன்முடி ஆகியோரின் மகன்களுக்கு பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரின் மகன்கள் கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ளனர். இதே போல திமுகவில் அப்பா- மகன்கள் என்று 50க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகள் உள்ளனர். ஆனாலும் கூட ஆர்.எஸ்.பாரதியின் மகனுக்கு கட்சியில் எந்த முக்கிய பதவியும் கிடைக்கவில்லை. இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

நினைத்த பதவி கிடைக்கவில்லை

தவிர கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு உயர்த்தப்படுவோம் என்று நம்பியிருந்த நேரத்தில் அமைப்புச் செயலாளர் பதவிதான் அவருக்கு மீண்டும் கிடைத்தது.

அதேபோல இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்படுவோம் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதுவும் நடக்கவில்லை.
ஒரு காலத்தில் திமுக வழக்கறிஞர் பிரிவில் மிகுந்த அதிகாரம் படைத்தவராக திகழ்ந்த ஆர் எஸ் பாரதிக்கு இன்னொரு வருத்தமும் உண்டு என்கிறார்கள். குறிப்பாக முந்தைய அதிமுக அரசுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை தொடுத்ததுடன் மட்டுமின்றி, பல்வேறு வழக்குகளிலும் அவர் ஆஜராகி வந்தார்.

வாயை அடைத்த திமுக

ஆனால், தற்போதோ அவருக்குப் பதிலாக வில்சன் எம்பிக்கு கட்சியில் மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது, என்கிறார்கள். திமுக சார்பில் முக்கிய வழக்குகளை நீதி மன்றங்களில் வில்சன்தான் தாக்கல் செய்கிறார்.

அவர்தான் ஆஜராகியும் வாதிடுகிறார். இது ஆர் எஸ் பாரதிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தான் இருக்கும்போதே இந்த நிலை என்றால் எதிர்காலத்தில் மகன் நிலை என்னவாகும் என்ற குழப்பத்தில் அவர் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இதனாலேயே, கட்சி நிர்வாகிகளிடம் குறைகளைக் கேட்கவேண்டிய இடத்தில் இருக்கும் நிலையிலும் தன் மனக் குறையை அவர் மேடையில் வெளிப்படுத்தி இருக்கிறார். அவரை அறிவாலயத்தின் மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும் தெரிகிறது.

கவனம் செலுத்துவாரா முதலமைச்சர்?

ஆர் எஸ் பாரதியை போலவே, திமுகவிற்காக 30, 40 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து எந்த பதவியையும் பெறாமல் இருப்பவர்கள் ஏராளம். அதேநேரம் வேறு கட்சிகளில் பல ஆண்டுகள் இருந்துவிட்டு திமுகவில் சேர்ந்த பின்பு குறுகிய காலத்தில் எம்எல்ஏ, எம்பி, அமைச்சர்களாக ஆனவர்கள் நிறைய பேர் உண்டு.

இது கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களின் மனதில் ஒரு வித சோர்வை ஏற்படுத்தி இருக்கும் என்பது நிச்சயம். எதிர்காலத்தில் அவர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் போல அமைதியாக ஒதுங்கிக் கொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. எனவே இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கடமை திமுக தலைமைக்கே உள்ளது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!