வரலாற்றில் முதன்முறையாக தாஜ்மஹாலுக்கு வந்த சோதனை… யாருப்பா ஓனர்? அரசு அனுப்பிய நோட்டீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2022, 2:18 pm

தனிநபர் வீடுகள், தனியார் கட்டிடங்களுக்குச் சொத்து வரியும், தண்ணீர் வரியும் வசூலிப்பது வழக்கம் ஆனால் அரசுக்கு சொந்தமான பல நூற்றாண்டாக இந்தியாவின் அடையாளமாகவும், கட்டிட கலையின் உச்சமாக இருக்கும் தாஜ்மஹால் போன்ற தேசிய நினைவு சின்னங்களுக்கு இதுவரையில் சொத்து வரி, தண்ணீர் வரி செலுத்தியதும், கோரியதும் இல்லை.

வரலாற்றில் முதன் முறையாக, உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆக்ரா முன்சிபல் கார்ப்பரேஷன், மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக விளங்கும் தாஜ்மஹால் -க்குத் தண்ணீர் வரியாக 1.9 கோடி ரூபாயும், 1.5 லட்சம் ரூபாயும் சொத்து வரியாகச் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய தொல்லியல் துறை இந்த நிலுவைத் தொகையை 15 நாட்களுக்குள் செலுத்துமாறு ஆக்ரா முன்சிபல் கார்ப்பரேஷன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் வரி செலுத்தப்படாவிட்டால் சொத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் குமார் படேல் ஆக்ரா முன்சிபல் கார்ப்பரேஷனின் நோட்டீஸ் குறித்துச் செய்தியாளர்களிடம் கூறுகையில் தேசிய நினைவுச் சின்னங்களுக்குச் சொத்து வரி விதிக்கப்படாது. தண்ணீருக்கு வணிக ரீதியான பயன்பாடு இல்லாததால் நாங்கள் அதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

தாஜ்மஹால் சுற்றியுள்ள வளாகத்திற்குள் பசுமையாகச் சூழ்நிலையைப் பராமரிக்க மட்டுமே தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தாஜ்மஹால் -க்கான தண்ணீர் வரி மற்றும் சொத்து வரி முதல் முறையாகப் பெறப்பட்டுள்ளது, இது தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் ராஜ் குமார் படேல் தெரிவித்தார்.

தற்போது உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் வரிகள் கணக்கிடப்பட்டுத் தனியார் அமைப்புகள் வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட கோளாறாகக் கூட இருக்கலாம்.

தாஜ்மஹால் 1920 இல் இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கூட, நினைவுச் சின்னத்திற்கு வீடு அல்லது தண்ணீர் வரி விதிக்கப்படவில்லை என இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?