54 பந்துகளில் சதம்… பொளந்து கட்டிய கில் ; விக்கெட் மழை பொழியும் இந்திய பவுலர்கள்… தடுமாறும் நியூசிலாந்து..!!

Author: Babu Lakshmanan
1 February 2023, 10:02 pm

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் கில் அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வெல்லும் அணி தொடரையும் வெல்லும்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்காக கில் மற்றும் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். கிஷன், 1 ரன் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தாலும், திரிபாதி உடன் 80 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கில். திரிபாதி 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் (24) ஏமாற்றம் அளித்தார்.

கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் 103 ரன்களுக்கு கில் பார்ட்னர்ஷிப் அமைத்தார். விக்கெட்டுகள் போனாலும் அதிரடியை காட்டிய கில் 54 பந்துகளில் சதம் விளாசினார். மறுமுனையில் பாண்டியா 30 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்த கில், 63 பந்துகளில் 126 ரன்களை எடுத்திருந்தார். 12 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை அவர் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது.

தற்போது 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து ஆட்டத்தின் தொடக்கத்திலேயே விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணி 64 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…