ஈரோடு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா… தடுக்கும் அதிகாரிக்கு ரூ.1 கோடி பரிசு ; கரூரில் வைரலாகும் சுவரொட்டி!

Author: Babu Lakshmanan
25 February 2023, 4:37 pm

ஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுத்து தண்டனை பெற்றுத் தரும், நேர்மையான அதிகாரிகளுக்கு 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா என்று கரூரில் ஒட்டப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் கண்ணன். கரூர் மாநகராட்சியில் நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் நின்று மக்களிடம் வீடு வீடாக சென்று வெற்றிலை பாக்கு வைத்தும், நூதன முறையில் பல்வேறு உறுதிமொழி அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

26வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட ரமேஷ் 1,596 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதே வார்டை சேர்ந்த சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ராஜேஷ் கண்ணன் என்பவர் 335 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார். கவுன்சிலர் தேர்தலின் போது, இவரது தேர்தல் வாக்குறுதி மற்றும் துண்டு பிரசுரங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் மிகவும் முக்கிய தேர்தலாக பார்க்கப்படும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய கட்சிகள் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு பரிசு பொருள்கள், பணம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கரூரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுத்து தண்டனை பெற்று தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிக்கு ஒரு கோடி பரிசு மற்றும் பாராட்டு விழாவும், இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் என சுவரொட்டி அடித்து கரூரின் முக்கிய பகுதிகளில் ஒட்டியுள்ளார்.

கரூர் மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை பொதுமக்கள் பார்த்து முணுமுணுத்தபடி சென்றனர்‌.

  • anandraj shared his feelings about deleted his scenes in bigil movieஇது கூட பண்ணலைன்னா நீங்க இயக்குனரா?- அட்லீயை கண்டபடி கேட்ட ஆனந்த்ராஜ்!