சாராய அமைச்சர் சம்பாதிக்க ஏழை மக்களை பலியிடுவதா? திறனில்லா திமுக அரசு : அண்ணாமலை காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2023, 1:48 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சின்னராஜா குப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி விஷ்ணு பிரியா(16). கூலித் தொழிலாளியான இவரது தந்தை மது போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாயிடம் சண்டை போடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

தந்தையின் போதை அடாவடியால் சிறுமி மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். முதலில் சிறுமி விஷ்ணுபிரியா தந்தையை திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையுடன், இனிமே குடிக்க வேண்டாம் என்று தந்தையிடம் பல முறை கெஞ்சிக் கேட்டிருக்கிறார்.

ஆனால், குழந்தையின் கண்ணீருக்குக் கூட மனம் கரையாத அளவுக்கு போதை அவரை அடிமையாக வைத்திருந்தது.

தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக வீட்டில் நடக்கும் பிரச்சினைகளைப் பார்த்துவந்த சிறுமி விஷ்ணுபிரியா, இறுதியில் வேறு வழி இல்லாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், சிறுமி தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்தவும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு திமுக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தொடர்ந்து ஏற்படும் உயிர்ப் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது திமுக அரசு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர், “தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனைக்குப் பல உயிர்கள் பலியான சில நாட்களிலேயே, மதுக்கடைகள் திறக்கும் நேரத்திற்கு முன்பே, பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்தியதில் இரண்டு பேர் பலியானார்கள். சயனைட் கலந்திருந்த மதுவை அருந்தியதால் மரணம் என்று அந்த வழக்கை, அதன் பின்னர் விசாரிக்காமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கைவிட்டுவிட்டது தமிழக அரசு.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இயங்கி வரும் பார்கள் அனுமதி இன்றி சட்ட விரோதமாக இயங்கி வந்திருக்கின்றன என்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர், மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடந்த செய்தி வெளிவந்தது. தற்போது மது பாட்டிலுக்குள், பாசி மிதப்பதாகச் செய்தி வெளிவந்துள்ளது.

இவற்றை அடுத்து, மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, மதுரை மாவட்டத்தில், டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கிக் குடித்த இருவர் மயக்கமடைந்து வீழ்ந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.

தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறந்து வைத்ததின் விளைவாக, மேலும் ஒரு துன்பகரமான நிகழ்வு நேற்று நடந்திருக்கிறது. 16 வயது பள்ளி மாணவி ஒருவர், தந்தையின் குடிப்பழக்கத்தால் வேதனையடைந்து தற்கொலை செய்துள்ளார்.

ஆனால், இவற்றைப் பற்றிக் கவலையில்லாத திமுக, மது ஆலைகள் நடத்தும் தங்கள் கட்சிக்காரர்களும், சாராய அமைச்சரும் சம்பாதிக்க, ஏழை எளிய மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாத திமுக அரசு, தற்போது அரசு மதுக் கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர்ப் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது?” என பதிவிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!