வாங்கிய ஓட்டுகளுக்காவது நன்றி காட்டுங்கள்… விடியவும் இல்லை, வடியவும் இல்லை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2023, 8:21 pm

வாங்கிய ஓட்டுகளுக்காவது நன்றி காட்டுங்கள்… விடியவும் இல்லை,வடியவும் இல்லை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் மழை காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால், ஏராளமான குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை நகர் முழுவதும் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது. பல பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்தாலும், இன்னும் ஏராளமான இடங்களில் மழைநீர் வடியாமல் இருந்து வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

எனினும், வடசென்னை பகுதியில், மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு அரசும், மாநகராட்சி நிர்வாகமும் உரிய கவனம் செலுத்தவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் மூன்று நாட்களாக மக்கள் பரிதவித்து வருகின்றனர். கழிவுநீருடன் மழை வெள்ளம் கலந்துள்ளதால் மக்கள் சொல்லொண்ணாத் துயருக்கு ஆளாகியுள்ளனர்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை செய்யக்கோரி வட சென்னை மக்கள் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தாலும், அப்பகுதியில் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகள் தரப்பு மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தண்ணீரிலும் கண்ணீரிலும் இராயபுரம்! மக்கள் வாழும் இடங்களில் தண்ணீரை அகற்ற ஒரு இயந்திரம் கூட வரவில்லை! இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு கூட வழியில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரமத்தின் சிகரத்தில் உள்ளார்கள்! வீடு முழுவதும் தண்ணீர் இருக்க ஒரு இரும்பு கட்டிலில் எத்தனை பேர் உறங்க முடியும்? சிறுக சிறுக சேர்த்து EMI-ல் வாங்கிய வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி நிற்கிறது.

தண்ணீர் வடியவில்லை என்றாலும் அவர்களது குறைகளை காது கொடுத்து கேட்பதற்கு கூட யாரும் வரவில்லை என கண்ணீர் வடிக்கின்றனர்‌. இன்னும் எத்தனை நாட்கள் இதே நிலைமையில் என் மக்களை வைத்து இருக்க போகிறீர்கள்? உடனடியாக உங்கள் பார்வையை இங்கு திருப்புங்கள்! கொஞ்சமாவது திருந்துங்கள்! வாங்கிய ஓட்டுகளுக்காவது நன்றி காட்டுங்கள்! விடியவும் இல்லை! வடியவும் இல்லை!” எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!