எந்த கட்சிக்கு தாவலாம்? முடிவை எடுக்க முடியாமல் தவிக்கும் ஜி.கே. வாசன் : கண்டுகொள்ளாத அதிமுக!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2024, 2:00 pm

எந்த கட்சிக்கு தாவலாம்? முடிவை எடுக்க முடியாமல் தவிக்கும் ஜி.கே. வாசன் : கண்டுகொள்ளாத அதிமுக!

அதிமுக -பாஜக கூட்டணியில் பயணித்த தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், ஆகிய இரண்டு கட்சிகளும் மதில் மேல் பூனையாக நிற்கின்றன.

அதிமுக பக்கம் செல்வதா, இல்லை பாஜக பக்கம் செல்வதா என முடிவெடுக்க முடியாமல் ஜி.கே.வாசன் தடுமாறி வருகிறார்.

காரணம் ஜி.கே.வாசனை ராஜ்யசபா உறுப்பினராக்கியது அதிமுக தான். அதே வேளையில் ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கச் சொல்லி அதிமுகவை வலியுறுத்தியதே பாஜக தான்.

இதனால் இரண்டு கட்சிகளுக்கும் கடமைப்பட்டவராக ஆகிறார் ஜி.கே.வாசன். அதுமட்டுமல்ல வாசன் மீது பிரதமர் மோடிக்கு மிகுந்த நன்மதிப்பு உண்டு. ஒரு கட்டத்தில் வாசன் மத்திய அமைச்சராக ஆகப் போகிறார் என்றெல்லாம் தகவல்கள் உலா வந்தன.

இந்நிலையில் அதிமுக -பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால் வாசன் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்க முடியாமல் ஆலோசனை மேல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஜி.கே.வாசன் மீது பிரதமர் மோடி வைத்திருக்கும் மரியாதை காரணமாக அவரை பாஜக பக்கம் இழுப்பதற்கு வேலைகள் நடந்து வருகின்றன.

அதேவேளையில் ஜி.கே.வாசனை அதிமுக தலைமை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. வந்தால் வரவேற்போம், சென்றால் விட்டுவிடுவோம் என்ற மனநிலையில் தான் அதிமுக உள்ளது.

காரணம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்கு வங்கி இல்லை எனக் கருதுகிறது அதிமுக தலைமை. இருப்பினும் பிரச்சாரம் உள்ளிட்ட ஆதரவுக்கு வாசன் தேவைப்படுவார் என்பதும் அதிமுகவில் உள்ள ஒரு சில நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிடம் போராடி தஞ்சாவூர் தொகுதியை கேட்டு வாங்கிய ஜிகே வாசன், அங்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தில் தனது கட்சியின் சார்பில் வேட்பாளரை போட்டியிட வைத்தார்.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை பொறுத்தவரை அவரும் கூட்டணி தொடர்பாக இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!