திராவிட மண்ணில் மத அரசியல், தமிழ் துரோகிகளுக்கும் இடமில்லை : பூஜ்ஜியத்தை காட்டி துரத்த வேண்டும்.. கனிமொழி காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2024, 6:19 pm

திராவிட மண்ணில் மத அரசியல், தமிழ் துரோகிகளுக்கும் இடமில்லை : பூஜ்ஜியத்தை காட்டி துரத்த வேண்டும்.. கனிமொழி காட்டம்!

தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழா, தமிழக அரசின் 3 ஆண்டுகால சாதனை, பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசும்போது, தமிழ்நாட்டைப் பற்றி மக்கள் புண்படும் விதமாக தமிழக ஆளுநர் தொடர்ந்து பேசி வருகிறார்.

பிரதமர் பெயருக்கு அவ்வப்போது ஓரிரு திருக்குறளைப் பேசுகிறார். இதை வைத்து தமிழ் தொன்மையான மொழி என பிரதமரே பேசிவிட்டார் என விளம்பரம் செய்கின்றனர்.

தமிழ் தொன்மையான மொழி என்பது இவர்கள் பேசித்தான் தெரிய வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை.

நம் மக்களுக்கு முன்பே தெரிந்த விஷயம் அது. ஆனால், தமிழுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை விட யாருக்கும் தெரியாத சம்ஸ்கிருத மொழிக்கு 22 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் நிதி கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிடமிருந்து ஜிஎஸ்டி உள்பட அனைத்து வரிகளையும் வாங்கிக் கொள்ளும் மத்திய அரசு, திரும்பக் கொடுப்பதற்கு மனசு இல்லை.

நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது. ஆனால், நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாலும், புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, தென் மாவட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தமிழக முதல்வர்தான் உதவிக்கரம் நீட்டினார்.

தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பிரதமர் கவலைப்படுவதில்லை. தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால், செய்ததாகக் கணக்கு காட்டுவதற்காக ரூ. 7 ஆயிரம் கோடிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிச் சென்றார்.

திராவிட மண்ணில் மத அரசியலுக்கும், தமிழ் துரோகிகளுக்கும் இடமில்லை என பூஜ்ஜியத்தை காட்டி துரத்தக்கூடிய தேர்தல் இது.

இத்தேர்தல் வெறும் அரசியல் வெற்றிக்கானது மட்டுமல்ல; நம்முடைய எதிர்காலம், இந்த நாட்டின் அமைதியைப் பொருத்து இருப்பதால், அதைக் காக்கும் கடமை நமக்கு இருக்கிறது என மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என கனிமொழி பேசினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!