தேர்தலில் பணப்பட்டுவாடா செய்பவர்கள் குறித்து மக்களே புகார் அளிக்கலாம்.. செயலியை அறிவித்த தேர்தல் அலுவலர்!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2024, 3:58 pm

தேர்தலில் பணப்பட்டுவாடா செய்பவர்கள் குறித்து மக்களே புகார் அளிக்கலாம்.. செயலியை அறிவித்த தேர்தல் அலுவலர்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுடன் மாநிலத் தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பாராளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் அலுவலர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் ,கோவையில் பாதுகாப்பு பணியில் ஏற்கனவே மூன்று துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தேர்தலில் முறைகேடாக பண பட்டுவாடா செய்வதை தடுக்க, வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிகமாக பணம் வரவு வைக்கப்பட்டாலும்,வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டாலும் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தேர்தலில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பின் போது பணம் கொடுப்பது போன்று முறைகேடுகளில் ஈடுபட்டால், அவற்றை பொதுமக்களே நேரடியாக புகார் தெரிவிக்க சி விஜில் என்ற செயலி உள்ளதாக கூறினார்.

அதில் புகார் பதிவிடப்பட்ட 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாற்றுத்திறனாளிகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் வயோதிகர்கள் இந்த தேர்தலில் சிரமம் இல்லாமல் வாக்களிக்க சக்சம் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

அவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க, தேர்தல் அதிகாரி வீட்டிற்கு சென்று நேரடியாக வாக்குகளை பெற முடியும் என தெரிவித்தார்.

கடந்த பத்து நாட்களாக வருவாய் துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்து வருவதால் தேர்தல் பணிகள் பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?