’இந்தி இசை’..ஸ்டாலின் இப்படி செய்திருக்கலாம்.. தமிழிசை அடுக்கடுக்கான கேள்வி!

Author: Hariharasudhan
19 October 2024, 7:51 pm

தமிழைச் சொல்லி மக்களை ஏமாற்றினோம், இனிமேலும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் (திமுக) எண்ணம் என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “விமானத்தில் நான் வந்த ஒரு மணி நேரத்திற்குள்
முதல்வர் ஏதாவது ட்வீட் போட்டு இருக்கின்றாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழுக்கு இவர்கள் மட்டுமே உரிமையானவர்கள் என்பது போல பேசுகின்றனர். பாஜகவினர் தமிழ் பற்று இல்லலாதவர்கள் என காட்ட முயல்கின்றனர். இதற்கான வெளிப்பாடுதான் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியது. ஏதாவது ஒரு காரணம் கிடைக்குமா என முதல்வர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழைச் சொல்லி மக்களை ஏமாற்றினோம், இனிமேலும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம். இன்னொரு மொழியைச் சொல்லி தமிழை யாரும் சிறுமைப்படுத்த முடியாது. மொழி அரசியலை இனிமேலாவது திமுக கைவிட வேண்டும்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்பாக இந்தி தினத்தை வாழ்த்தி பேசி விட்டு, இப்போது இந்தியை எதிர்த்து பேசுகிறார். தமிழகத்தில் தமிழில் மாணவர்கள் முழுமையாக பேசுவது இல்லை. இந்தியை எதிர்த்து விட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உருது மொழியில் எழுதுகிறார். இது மும்மொழியா? நான்கு மொழியா என்பதை அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்க வேண்டும்.

தம்பி உதயநிதி தவறுகளைத் திருத்த திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மகிழ்ச்சிதான். கோவையில் தொடர்ந்து வெடிகுண்டு புரளி வந்து கொண்டிருக்கின்ற சூழலில், இது போன்ற புரளிகளை காவல்துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

பள்ளிகளுக்கான இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளிகள் சற்று கவலை அளிப்பதாக உள்ளது என்பதால் காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வடமாநிலத்தவர்கள் தமிழ் படிக்கின்றனர், ஆனால் இங்கு ஏன் தடுக்கின்றனர்? வளரும் குழந்தைகளுக்கு மொழிகளை கிரகித்துக் கொள்ளும் தன்மை இருக்கின்றது, அதனை தடுக்கக்கூடாது.

நெல்லை நீட் பயிற்சி மையத்தில் நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்காக நீட் தேர்வை குறைசொல்ல முடியாது. நீட் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்த வேண்டும். நீட் மையம் செல்லாமலேயே மாணவர்கள் தேர்வாகி இருக்கின்றனர்.

சென்னையில் ஏதோ சிறிய மழைக்கு செய்த பணிகளை பெரிதாக பேசுகின்றனர். தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை விட்டது வரவேற்கத்தக்கது. பவன் கல்யாண் சொன்னது போல சனாதனத்தை எதிர்த்தவர்கள் காணாமல் போவார்கள் என்பதால், இந்து பயபக்தியோடு இருக்க வேண்டும்.

MK STALIN

ஆளுநர்களுடன், முதலமைச்சர்கள் இணைக்கமான சூழ்நிலையினைக் கொண்டு வர வேண்டும். நேற்றைய விவகாரத்தில் தமிழக ஆளுநரை அழைத்து, என்ன பிரச்னை என முதல்வர் கேட்டிருந்தால் எளிதாக இந்த பிரச்னை முடிந்திருக்கும். பதவிக்கு ஏற்றபடியான உடையினை அதற்கு ஏற்றபடி அணிவதுதான் சரியாக இருக்கும்.

இதையும் படிங்க: இதுக்காகலாம் வம்புக்கு வரக்கூடாது.. ஆளுநருக்கு துரைமுருகன் பதிலடி!

இந்திக்கு ஆதரவாக பேசுவதால் என்னை கூட இந்திஇசை என விமர்சிக்கின்றனர். தமிழ் எனது பெயரில் மட்டுமல்லாது, உயிரிலும் இருக்கிறது. திமுகவைச் சேர்ந்த எத்தனை பேரின் குழந்தைகள் தமிழை படிக்கின்றனர்? தமிழ்த்தாய் வாரம் கொண்டாடப்பட வேண்டும்.

தமிழ்தாய் வாழ்த்து பாடலில் வரிகள் விடுபட்டதில் எனக்கு ஒப்புதல் கிடையாது. இதேபோல் உள்நோக்கம் இல்லாத ஒன்றை உள்நோக்கத்துடன் செய்ததாக காட்ட முயல்கின்றனர். தெரியாமல் செய்த தவறை பெரிதாக்குகின்றனர். எதையாவது பூதாகரமாகச் செய்து அரசியல் செய்ய பார்க்கும் நிலையில் போடும் இந்த இரட்டை வேடத்தை கண்டிக்கிறோம்” என்றார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!