அயோத்தி விவகாரம் முதல் டெல்லி கலால் வழக்கு வரை.. யார் இந்த சஞ்சீவ் கண்ணா?

Author: Hariharasudhan
25 October 2024, 12:45 pm

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நவம்பர் 11 அன்று பதவியேற்க உள்ளார். இவர் யார் என்பது குறித்து இதில் காணலாம்.

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் தற்போது பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் நவம்பர் 10ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே, அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்குமாறு, கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சகம் சந்திரசூட்டுக்கு கடிதம் அனுப்பி இருந்தது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில், நாட்டின் உயரிய உச்ச நீதிமன்றத்தின் 51வது புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை பதவியேற்க உள்ளது உறுதி செய்யப்பட்டது. மேலும், வருகிற நவம்பர் 11ஆம் தேதி சஞ்சீவ் கண்ணா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்துள்ள நிலையில், சஞ்சீவ் கண்ணா, அடுத்ததாக நாட்டின் உயரிய பொறுப்பை வகிக்க உள்ளார்.

கடந்த 1960ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி டெல்லியில் பிறந்த இவர், அங்கு உள்ள பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். இவரது தந்தை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 1985ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். படிப்பை முடித்த சஞ்சீவ கண்ணா, 1983ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். இதனையடுத்து, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். தொடர்ந்து, அவர் 2004-ல் டெல்லி அரசின் வழக்கறிஞராக (சிவில்) நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, டெல்லி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக 2005ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட சஞ்சீவ் கண்ணா, 2019ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவ்வாறு தனது உச்ச நீதிமன்ற பணியைத் தொடங்கிய சஞ்சீவ் கண்ணா, தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமை மற்றும் அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் முக்கிய தீர்ப்பினை அளித்தவர்.

இதையும் படிங்க: சென்னையில் நடத்துநர் கொலை.. இறுதிச்சடங்கிற்காக வந்தவருக்கு சிறை!

மேலும், அயோத்தி வழக்கில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய அமர்வு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை அனுமதிக்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த அமர்வு,அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்குவதை உறுதி செய்த அமர்வில் இடம் பெற்றிருந்தார். அதேபோல், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் தொடர்புடைய பணமோசடி வழக்கில், சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, அப்போது டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார். உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கான ஓய்வு வரம்பு 65 வயது ஆகும். சந்திரசூட்டுக்கு அடுத்ததாக, உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் கண்ணா, 2025ஆம் ஆண்டு மே 13 வரை 6 மாத காலத்துக்கு தலைமை நீதிபதியாக செயல்படுவார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!