மன்னர் மீது சகதியை அடித்த மக்கள்.. ஸ்பெயினில் மீளா துயரம்!

Author: Hariharasudhan
4 November 2024, 11:13 am

ஸ்பெயினில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கச் சென்ற அந்நாட்டு மன்னர் மீது மக்கள் சகதியை வாரியது பேசுபொருளாகியுள்ளது.

மத்ரிட்: உலகின் மிக முக்கிய சுற்றுலா நாடுகளில் ஒன்றான ஸ்பெயினின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். முக்கியமாக, ஸ்பெயினின் வலென்சியா பிராந்தியம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இவ்வாறு வலென்சியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, இதுவரை 200க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த நிலையில், பலரைக் காணவில்லை. எனவே, அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலரும் தொடர்ந்து தற்போது வரை போராடி வருகின்றனர்.

இதனால், வெள்ளத்தில் பொதுமக்கள் பலரின் வீடுகள், பாலங்கள் ஆகியவை சேதம் அடைந்தன. மேலும், வலென்சியாவில் உள்ள ஃபைபோர்ட்டா பகுதியில் மட்டும் சுமாா் 60 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

SPAIN FLOOD

இந்த நிலையில் தான், நேற்று வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ஃபைபோர்ட்டா நகரத்தில், வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்காக ஸ்பெயின் மன்னர் பெலிப்பே, தனது மனைவியும் அந்நாட்டு ராணியுமான லெட்டிசியாவுடன் சென்றார். அப்போது, மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், ஸ்பெயின் மன்னர் மீது மண்ணை அள்ளி திடீரென வீசினர்.

இதையும் படிங்க: ஓவனில் கிடந்த இந்தியப் பெண்ணின் உடல்.. கனடாவில் கொடூரம்!

இதனால் திகைப்படைந்த மன்னர், தனது தலையைக் குனிந்தார். பின்னர், அவரது காவலர்கள் மன்னரை சூழ்ந்தனர். இருப்பினும், அங்கு இருந்த பாதிக்கப்பட்ட மக்களுடன் நிதானமாக நின்று பேசுவதற்கு மன்னரும், அவரது மனைவியும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அதில் பலனில்லை.

இதனிடையே, பாதுகாப்பு கருதி மன்னரையும், அவரது மனைவியையும் பாதுகாவலர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும், அங்கிருந்த மக்கள் ஸ்பெயின் பிரதமரை கடுமையாக விமர்சித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அது மட்டுமல்லாமல், இந்த நிகழ்வு சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!