அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

Author: Hariharasudhan
4 March 2025, 12:04 pm

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

சென்னை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு (LCC) தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை தலைமையிலான குழு நிர்வாகிகள், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, கரோனா தொற்றின்போது உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யா பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “என்னுடைய கணவர் கொரோனா காலக்கட்டத்தில் பணிபுரிந்தபோது மரணமடைந்தார். அவர் மரணமடைந்த பிறகு அரசு துணை நிற்கும் என்று நான் நம்பினேன். ஆனால், இதுவரை திமுக அரசு எந்த நிவாரண நிதியும் எங்களுடைய குடும்பத்திற்குத் தரவில்லை.

எனக்கு அரசு வேலை தருவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அரசு வேலையும் எனக்கு இதுவரை தரவில்லை. அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினோம். அப்போது அரசு வேலையும், நிவாரணமும் தருகிறோம் என்று உறுதியளித்தார்கள். ஆனால் இதுவரை எதுவும் எங்களுக்குத் தரப்படவில்லை.

Ma Subramanian

அதிலும், என் கணவருக்கு இரண்டு மனைவிகள் என அமைச்சர் கூறியுள்ளார். அவர் ஏன் அப்படி கூறினார் என எனக்குத் தெரியவில்லை. அது எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. இதன் பிறகாவது அரசு எங்களுக்கு அரசு வேலையும், நிவாரண நிதியும் வழங்க வேண்டும்” எனக் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னதாக பேசிய அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை, “அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: திமுகவுக்கு ‘இது’தான் முக்கியமானது.. கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!

மேலும் அவர் பேசுகையில், “தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மார்ச் 18ஆம் தேதி முதல் முதலமைச்சருக்கும், தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் மின்னஞ்சல் அனுப்புதல், மார்ச் 19ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்னை மருத்துவ கல்வி இயக்குநர் வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து, ஜூன் 11ஆம் தேதி, மேட்டூர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் கல்லறையில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை மேற்கொள்வது எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, இதில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, போராட்டத்திற்கு முன்னதாகவே மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?