7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!
Author: Udayachandran RadhaKrishnan6 May 2025, 5:14 pm
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதில் அங்கு உள்ள எல் பிளாக்கில் பொன்வேல் ( வயது 33 ) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஹோட்டலில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் இவருக்கு 5 வயதில் மகள் மற்றும் 7 மாதத்தில் குழந்தை உள்ளது.
இதையும் படியுங்க: பெட்ரோல் பங்கில் நூதன மோசடி.. 3000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி தப்பியோடிய வாகன ஓட்டி!
மகள், அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் வசிக்கும் வீடு அருகில் கண்ணன் என்பவரது மனைவி சௌமியா (வயது 50 ) என்பவர் மகன்கள் சூர்யா மற்றும் சாந்தராம் பிரகாஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். சௌமியா வீட்டில் 4 நாய்களை வளர்த்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் இவர் வளர்த்த நாய்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு சிலரை கடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாய்களை வீட்டில் வளர்க்க வேண்டாம் என்று அக்கம் பக்கத்தினர் கூறி உள்ளனர். ஆனாலும் சௌமியா தொடர்ந்து நாய்களுக்கு உணவு அளித்து வீட்டிற்கு உள்ளேயே வளர்த்து வந்து உள்ளார்.
சம்பவத்தன்று, பொன்வேலின் மகள் வீட்டு அருகில் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது சௌமியா அவரை வேறு இடத்திற்கு சென்று விளையாடும் படி கூறி உள்ளார். தொடர்ந்து அந்த மாணவி விளையாடிக் கொண்டு இருந்த போது சௌமியா வீட்டில் வளர்த்த நாயை விட்டு அவரை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி வலியில் கதறினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாயை விரட்டினர். பிறகு இது குறித்து பொன்வேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே விரைந்து வந்து சௌமியாவிடம் நாயை விட்டு மகளை கடிக்க வைத்தது குறித்து தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சௌமியா அவரை திட்டியதாக கூறப்படுகிறது.
இடைத் தொடர்ந்து பொன்வேல் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் செய்தார். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பிறகு சௌமியா மற்றும் மகன்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சௌமியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் மாணவியை கடித்த நாய் குறித்து ப்ளூ கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் மனைவியை கடித்த நாய் மேலும் சிலரை கடித்து உள்ளது என்பதால் அந்த நாயை அங்கு இருந்து கொண்டு சென்று தனியாக பராமரித்து அதை கண்காணித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அம்மன் குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.