உன் மகள் முகத்தில் ஆசிட் வீசிருவோம்.. கொலை மிரட்டலால் கதிகலங்கிப் போன குடும்பம் : பரபரப்பு புகார்!
Author: Udayachandran RadhaKrishnan14 May 2025, 10:33 am
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கோவை புதூர் பகுதியில் வசித்து வருபவர் முகம்மது அலி ஜின்னா. இவர் சஞ்சய் குமார் ரெட்டி என்பவருக்கு பொது அதிகார முகவராக இருந்து வருகின்றார்.
இவர் கடந்த வாரம் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவில் ஒரு புகார் மனு அளித்து அதற்கான சிஎஸ்ஆர் பெற்றுள்ளார்.
இந்தநிலையில் இவருக்கு கொலை மிரட்டல் வருவதாக கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு வழங்க அவரது வழக்கறிஞர் நந்தகுமார் உடன் வருகை தந்தார்.
அவர் அளித்த மனுவின் விவரம் வருமாறு:- முருகேசன், ரமேஷ், மைதிலி, முனீஸ்வரன், ஜெயப்பிரகாஷ், ஆதர்ஸ் நாராயணன் மற்றும் பெயர் தெரியாத நபர்கள் மீது நான் பண மோசடி குறித்து பல புகார்கள் காவல்நிலையத்தில் அளித்திருந்தேன்.
நேற்றிரவு சம்பந்தப்பட்ட நபர்களின் சார்பாக எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புகார்தாரரின் நண்பரான கோவைப்புதூரில் உள்ள செல்வராஜ் வீட்டிற்கு அருகில் சென்று நேற்று இரவு நோட்டம் பார்த்துள்ளனர்.
வீட்டிலுள்ள அவரது மகளின் முகத்தில் ஆசிட் வீசுவதாகவும் மிரட்டியுள்ளனர். காவல் நிலையத்தார் நடவடிக்கை எடுக்க கால தாமதம் செய்வதால், எனக்கு தொடர்ச்சியான கொலை மிரட்டல்கள் வருவதால் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் உயிரைப் பற்றிய பயமும், கவலையும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே மிரட்டல் விடுத்தார் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தக்க பாதுகாப்பு அளிக்குமாறு வழங்குமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.