கையெழுத்து போட மட்டும் அப்பா தேவையா? பக்கத்துக்கு பக்கம் ஆதங்கத்தை கொட்டிய ரவி மோகன்!
Author: Prasad15 May 2025, 3:10 pm
ஆதங்கத்தை கொட்டிய ரவி மோகன்
நடிகர் ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து பிரிந்த செய்தியை நாம் அறிந்திருப்போம். ஆர்த்தியின் தாயார் தன்னை மதிக்கவில்லை எனவும் தனது திரைப்படத் தேர்வுகளில் தலையிட்டு அதில் வரும் பணத்தை அவர்களே வைத்துக்கொள்கிறார்கள் எனவும் ரவி மோகன் பல புகார்களை அடுக்கியிருந்தார்.
இதனை தொடர்ந்து கெனிஷா பிரான்சிஸுடன் ரவி மோகன் ஜோடியாக ஐசரி கணேஷ் வீட்டுத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. “நானும் கெனிஷாவும் சிறந்த நண்பர்கள்” என்றுதான் பல நாட்களாக ரவி மோகன் கூறி வந்தார். ஆனால் இருவரும் அத்திருமண நிகழ்வில் ஜோடியாக கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் குவியவைத்தது.

அதனை தொடர்ந்து ஆர்த்தி, ஜெயம் ரவியை குறித்து தனது ஆதங்கத்தை கொட்ட தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரவி மோகன் 4 பக்கங்களுக்கு தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
பெற்றவர்களையே பார்க்க விடவில்லை…
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை கிசுகிசுக்களாகவும் உண்மையற்றவைகளால் திரிக்கப்படுவதை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. என்னுடைய மௌனம் பலவீனம் அல்ல- அது உயிர்வாழ்தல். ஆனால் என்னுடைய பயணமும் தழும்புகளும் தெரியாத நபர்களால் என்னுடைய நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படும்போது நான் நிச்சயம் பேசியே ஆகவேண்டும்.
ஒரு வயது வந்தவனாகவும் உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பண ரீதியிலும் என்னிடம் முறைகேடு செய்தவற்றில் இருந்து உயிர் வாழ்ந்தவன் என்ற முறையிலும் இதை நான் சொல்கிறேன். இத்தனை ஆண்டுகளாக எனது பெற்றோரை கூட பார்க்க முடியாதவனாக தனிமைப்படுத்தப்பட்டு கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்தேன். அந்த காயங்களை ஆற்ற நான் முயல தொடங்கிய சமயத்தில் இருந்து அது தாங்கமுடியாததாக இருந்தது. ஆனால் இப்போது அந்த வாழமுடியாத வாழ்க்கையில் இருந்து வெளியேறக்கூடிய தைரியத்தை நான் கண்டடைந்துவிட்டேன்” என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் ரவி மோகன்.
குழந்தைகளை கருவியாக பயன்படுத்துகிறார்கள்
மேலும் அதில் குறிப்பிட்டுள்ள ரவி மோகன், “என் மனதை மிகவும் உடைய வைப்பது என்னவென்றால், பொருளாதார லாபத்திற்காகவும் அனுதாபத்திற்காகவும் எனது குழந்தைகளை கருவியாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான். எனது குழந்தைகளை நான் பார்ப்பதில் இருந்தும் அவர்களிடம் நான் பேசுவதில் இருந்தும் என்னை தடுக்க பவுன்சர்களை எப்போதும் கூடவே வைத்திருக்கின்றனர். ஆனால் நீங்களோ எனது தந்தை ஸ்தானத்தை கேள்விக்குள்ளாக்குகிறீர்கள்? எனது குழந்தைகளுக்கு விபத்து ஏற்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகுதான் எனக்கு அது மூன்றாவது நபர் மூலமாக தெரிய வந்தது. அதுவும் எப்படி என்றால், ஒரு தந்தையாக அல்ல, கார் பழுதுபார்க்கும் காப்பீட்டிற்காக எனது கையெழுத்து தேவைப்பட்டதால் எனக்கு தெரிய வந்தது” என கூறியுள்ளது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
4 பக்கங்களுக்கு நீளும் ரவி மோகனின் அறிக்கையை படித்த ரசிகர்கள் பலரும் ரவி மோகனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பலரும் தங்களது ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.