திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது உறுதி.. பாஜக கூட்டணி வலிமையாக உள்ளது : அண்ணாமலை கருத்து!
Author: Udayachandran RadhaKrishnan16 May 2025, 1:20 pm
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய ஜனாதிபதி தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திற்கு சில கேள்விகளை கேட்டுள்ளார். தமிழக மக்கள் சில அரசியல் கட்சியினர் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.

உச்சநீதிமன்றத்திற்கு என்று ஒரு அதிகாரமும், ஆளுநருக்கு என்று ஒரு அதிகாரமும், ஜனாதிபதிக்கு என்று ஒரு அதிகாரமும், முதலமைச்சருக்கு என்று ஒரு அதிகாரமும் உள்ளது.
இது அனைத்தும் அரசியல் அமைப்பின் வரையறுக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டம் 142 உச்சநீதிமன்றத்தால் இந்த நாட்டிற்கு ஏதேனும் அநியாயம் நடைபெற்றுள்ளது என ஜனாதிபதி நினைத்தால், தாமாகவே வழக்கை எடுத்து தீர்ப்பு வழங்கலாம்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது ஜனாதிபதிக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதற்கு அரசியல் அமைப்பு சட்டம் 143 ஐ பயன்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. தற்போது 143 ஐ பயன்படுத்தி ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இந்த கேள்விக்கு உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பு சட்டம் 145ஐ பயன்படுத்தி 5 நீதிபதிகளை கொண்ட ஒரு குழுவை அமைத்து பதில் அளிக்கலாம். இந்திய ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளில் எந்த தவறும் இல்லை என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுவரை அரசியல் அமைப்பு சட்டம் 143 ஐ பயன்படுத்தி ஜனாதிபதிகள் 15 முறை உச்சநீதிமன்றத்திற்கு கேள்வி எழுப்பி உள்ளனர். 1991 ஆம் ஆண்டு கர்நாடக அரசு தமிழகத்திற்கு 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை குழு தீர்ப்பளித்தது.
அன்றைய முதல்வர் பங்காரப்பா தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது அரசியல் அமைப்பு சட்டம் 143 பயன்படுத்தப்பட்டு கர்நாடகா அரசின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. திமுக கூட்டணியில் உள்ளவர்கள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு பாரத பிரதமர் இதயத்தில் தனி இடம் உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கொங்கு பகுதியில் வீடு புகுந்து கொலை செய்கிறார்கள். தென் தமிழ்நாட்டில் ஆணவ படுகொலை நடைபெறுகிறது. சென்னையில் கூலிப்படை தாக்குதல்கள் நடைபெறுகிறது.
தமிழகம் கொலை காடாக மாறி உள்ளது. சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. சட்டம் ஒழுங்கு காரணமாக 2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை தமிழக மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள்.
இமாச்சல பிரதேசத்தில் பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு நினைத்தால் பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றலாம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
