மெயின் கேரக்டரே சொதப்பல்; காமெடியே புரியல- சந்தானம் படத்தை விளாசி தள்ளிய ப்ளு சட்டை மாறன்
Author: Prasad17 May 2025, 2:37 pm
கலவையான விமர்சனம்
சந்தானம் கதாநாயகனாக நடித்த “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இத்திரைப்படத்தை பார்த்த பலரும், “இதில் காமெடி சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை” என விமர்சிக்கின்றனர். எனினும் கதை வித்தியாசமான கதை எனவும் பாராட்டுகின்றனர். இவ்வாறு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தை பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளு சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மெயின் கேரக்டரே சொதப்பல்
“படத்தில் கதாநாயகன் கதாபாத்திரம் எல்லா திரைப்படங்களையும் அடித்து வெளுக்கிற ஒரு சினிமா விமர்சகரின் கதாபாத்திரம். இன்னொரு பக்கம் இந்த சினிமா விமர்சகரை பழி வாங்கவேண்டும் என காத்துக்கிடக்கும் பேய். அந்த பேய் தந்திரமாக ஹீரோவையும் ஹீரோ குடும்பத்தையும் திரையரங்கத்திற்கு வரவழைத்து அந்த தியேட்டரில் ஓடும் படத்துக்குள் தள்ளிவிட்டுவிடுகிறது. அந்த படத்தில் ஒரு பாழடைந்த பங்களா இருக்கிறது. அங்கு ஏன் இவர்கள் போனார்கள் என்று தெரியவில்லை. அங்குள்ள பேயிடம் இருந்து தப்பித்து வந்தார்களா இல்லையா என்பதுதான் மீதி கதை.
இந்த கதை ஆரம்பித்த விதம் மிகவும் நன்றாக இருந்தது. படங்களை கழுவி ஊற்றக்கூடிய சினிமா விமர்சகர்களை எல்லாம் பழி வாங்கக்கூடிய ஒரு பேய். அந்த பேய் இவர்களை எப்படி பழி வாங்குகிறது என்ற கோணத்தில் இத்திரைப்படத்தை கொண்டு சென்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் அந்த பேய் இவர்களை ஒரு சினிமாவுக்குள் தள்ளிவிட்டுவிடுகிறது.
அந்த சினிமா என்னவென்றால் அது ஒரு வழக்கமான சினிமா. சினிமாவுக்குள் சினிமா என்ற பாணியில் வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் தமிழில் ஓடியது கிடையாது. இந்த படத்தில் சினிமாவின் டெக்னிக்கல் விஷயங்களை வைத்து ஜோக் அடிக்கிறார்கள். அந்த ஜோக் எல்லாம் சினிமாத் துறையில் இருப்பவர்களுக்குத்தான் புரியும். வெகு ஜனங்களுக்கு அது புரிய வேண்டும் என்ற அவசியம் கிடையாதுதானே. இப்படிப்பட்ட ஜோக்குகளை வெகுஜனங்கள் எப்படி ரசிப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.
டிடி ரிட்டன்ஸ் படம் என்னதான் பேய் படமாக காமெடி படமாக இருந்தாலும் முடிந்தளவு அதை லாஜிக்குடன் எடுத்திருப்பார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். ஆனால் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் முக்கிய ஹீரோவான சந்தானம் காமெடியை செய்யவில்லை. அந்த பேய் கதாபாத்திரமாக வரக்கூடிய செல்வராகவன் கதாபாத்திரத்தையும் சரியாக வடிவமைக்கவில்லை. என்னதான் நோக்கம் என்று நமக்கும் புரியவில்லை” என தனது வீடியோவில் விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.