இவரா? இவர் விவகாரமான டைரக்டர் ஆச்சே- தனுஷின் கலாம் போஸ்டாரால் சலசலப்புக்குள்ளான நெட்டிசன்கள்!
Author: Prasad22 May 2025, 11:05 am
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான ஏபிஜே அப்துல் கலாம் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் பிறந்தவர். விண்வெளி ஆராய்ச்சித்துறையிலும் அணு ஆராய்ச்சியிலும் இவரது சாதனைகள் போற்றத்தக்கவை ஆகும். இவ்வாறு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிக்கவுள்ளார். “கலாம்” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் நேற்று இத்திரைப்படத்தின் இயக்குனரால் வெளியிடப்பட்டது.
இவர் விவகாரமான டைரக்டர் ஆச்சே!
தனுஷ் அப்துல் கலாமாக நடிக்கும் “கலாம்” திரைப்படத்தை ஓம் ராவ்த் இயக்கவுள்ளார். இதற்கு முன் இவர் பிரபாஸை வைத்து “ஆதிபுருஷ்” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் வெளிவந்தபோது சர்ச்சைகள் பல வெடித்தன. அது மட்டுமல்லாது இத்திரைப்படம் இராமாயண கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த நிலையில் ஒவ்வொரு திரையரங்குகளிலும் ஒரு இருக்கையை அனுமனுக்காக ஒதுக்கி வைக்க வேண்டும் எனவும் கூறினார். இந்த செயல் ட்ரோலுக்குள்ளாக்கப்பட்டது.
மேலும் “ஆதிபுருஷ்” திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மிகவும் சுமாராக அமைந்திருந்ததால் இத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியையும் தழுவியது. இந்த நிலையில்தான் தனுஷின் “கலாம்” திரைப்படத்தை ஓம் ராவ்த் இயக்குவதாக வெளிவந்துள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. “இவர் கொஞ்சம் விவகாரமான டைரக்டர் ஆச்சே” என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.