யார் நீ?- கதை சொன்ன இயக்குனரை இரக்கமின்றி அவமானப்படுத்திய டாப் நடிகர்! அடப்பாவமே…
Author: Prasad24 May 2025, 1:40 pm
முகின் ராவ் நடிக்கும் ஜின்
முகின் ராவ், பாவ்யா த்ரிகா, பால சரவணன், ராதாரவி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜின்”. இதனை டி ஆர் பாலா என்பவர் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் டி ஆர் பாலா, அனில்குமார் ரெட்டி ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
ஜின் என்ற துஷ்ட சக்தியை மையமாக வைத்து உருவான ஒரு ஹாரர் திரைப்படம் இது. இத்திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய இத்திரைப்படத்தின் இயக்குனரான டி ஆர் பாலா, தன்னை ஒரு டாப் நடிகர் அவமானப்படுத்திய சம்பவத்தை மன வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அவமானப்படுத்திய டாப் ஹீரோ
இயக்குனர் டிஆர் பாலா, “ஜின்” படத்தின் கதையை முதலில் தமிழின் ஒரு டாப் கதாநாயகரிடம் கூறினார். அந்த ஹீரோ அந்த கதை பிரமாதமாக இருப்பதாக பாராட்டினாராம். அதன் பின் “இந்த கதையில் எனக்கு ஏற்றார் போல் சில விஷயங்களை மட்டும் மாற்றவேண்டும். நாம் ஒரு ஐந்து முறை டிஸ்கஷன் செய்யவேண்டியது இருக்கும்” என கூறினாராம்.
அதற்கு இயக்குனரும் ஓகே சொன்னாராம். ஆனால் அந்த ஹீரோ 3 மாதத்திற்கு ஒரு முறை 6 மாதத்திற்கு ஒரு முறை என டிஸ்கஷனிற்கு அழைத்தாராம். இவ்வாறு இரண்டு வருடங்கள் ஓடிவிட்டதாம். அந்த சமயத்தில் அந்த கதாநாயகர் நடித்த இன்னொரு திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததாம்.
அப்போது அந்த ஹீரோவை பார்க்க தயாரிப்பாளருடன் சென்றாராம் இயக்குனர். அப்போது அந்த நடிகர் இயக்குனரை பார்த்து “யார் நீ?” என கேட்டாராம். இது இயக்குனருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியதாம். “நான் உங்களுக்கு ஜின் என்று ஒரு கதை கூறினேன். நீங்கள் கூட நன்றாக இருக்கிறது என சொன்னீர்கள். பின் நாம் பல காட்சிகளை மாற்றினோம்” என ஞாபகப்படுத்த, அதற்கு ஹீரோ “அந்த கதையை முதலில் இருந்து கூறுங்கள்” என்றாராம்.
இந்த ஹீரோ நம்முடன் படம் பண்ண வேண்டாம் என முடிவெடுத்துவிட்டார் என்பதை இயக்குனர் உணர்ந்துவிட்டாராம். எனினும் அவர் கதையை முழுவதும் கூறியிருக்கிறார். ஹீரோ கேட்டார் என்று ஒரு காட்சியை நடித்தும் காட்டியிருக்கிறார். ஆனால் கடைசியில் அந்த ஹீரோ, “நீங்கள் சினிமாவிற்கு தகுதியானவரே இல்லை” என அவமானப்படுத்தி அனுப்பிவிட்டாராம். இவ்வாறு தனக்கு நடந்த சம்பவத்தை மிகவும் மன வருத்ததுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் டிஆர் பாலா. ரசிகர்கள் பலரும் அந்த ஹீரோ யார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். பலரும் எஸ்.ஜே.சூர்யாவின் பெயரை கூறுகின்றனர்.