வீடியோ கேமில் இயக்குனர் ராஜமௌலி; அசரவைத்த ஜப்பான் கேம் டெவலப்பர்! வேற லெவல்…
Author: Prasad26 June 2025, 12:17 pm
பாகுபலி இயக்குனர்
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு சினிமாவில் பல ஆண்டுகளாக இயக்குனராக வலம் வந்தாலும் “பாகுபலி” திரைப்படம் ராஜமௌலியை உச்சத்திற்கு கொண்டுசென்றது. அதுவரை டோலிவுட் இயக்குனராக பார்க்கப்பட்ட ராஜமௌலி அதன் பின் இந்திய இயக்குனராக ஆனார்.

இந்த நிலையில் இயக்குனர் ராஜமௌலியை ஒரு வீடியோ கேமில் கதாபாத்திரமாக உருவாக்கியுள்ளார் ஜப்பானைச் சேர்ந்த ஒரு கேம் டெவலப்பர்.
Death Stranding
ஜப்பானைச் சேர்ந்த ஹிடியோ கொஜிமா என்ற கேம் டெவலப்பர் தான் உருவாக்கிய Death Stranding 2 என்ற வீடியோ கேமில்தான் இயக்குனர் ராஜமௌலியையும் அவரது மகன் கார்த்திகேயாவையும் கதாபாத்திரங்களாக வடிவமைத்துள்ளார். Death Stranding என்ற வீடியோ கேம் மிகவும் உலகப் புகழ்பெற்றதாகும். இதில் பிரபல அமெரிக்க நடிகர் நார்மன் ரீடஸ், பிரெஞ்ச் நடிகை லீ சீடக்ஸ் போன்ற நடிகர்கள் கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டிருந்தனர். இந்த வீடியோ கேமின் இரண்டாம் பாகத்தில்தான் தற்போது ராஜமௌலியும் அவரது மகனும் கதாபாத்திரங்களாக வருகின்றனர்.

இந்த வீடியோ கேம்மை வடிவமைத்த ஹிடியோ கொஜிமா, “RRR” திரைப்படம் ஜப்பானில் வெளியானபோது ராஜமௌலியையும் அவரது மகனையும் சந்தித்தாராம். அதனை தொடர்ந்து இந்த வீடியோ கேம்மை வடிவமைத்துள்ளார். இது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.