பட்டியலின இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீஸார்; 6 மாதம் முன்பு நடந்த சிசிடிவி வீடியோ!

Author: Prasad
2 July 2025, 1:20 pm

திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது தேனி போலீஸார் பட்டியலின இளைஞரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. 

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜன் என்பவர், கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக புகார் அளித்த நிலையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி ஜனவரி மாதம் 14 ஆம் தேதி அன்று காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் தனக்கு வேண்டும் என கூறி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கிழ் விண்ணப்பித்தார். 

இதனை தொடர்ந்து தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் 14.01.2025 ஆம் தேதியிட்ட சிசிடிவி காட்சிகள் அவருக்கு அளிக்கப்பட்டது. அதில் தனது கட்சிக்காரருடன் தான் சென்று புகார் அளித்ததை நிரூபிப்பதற்காக அந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் இளைஞர் ஒருவரை சரமாரியாக அடித்த காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

இந்த வீடியோ விவகாரம் குறித்த விசாரணையில் அந்த வீடியோவில் போலீஸாரால் தாக்கப்பட்ட நபர் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பதும் அவரது பெயர் ரமேஷ் என்பதும் அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. ஆனால் இவரை ஏன் காவல்துறையினர் இழுத்து வந்தனர் ஏன் இவரை தாக்கினர் என்பது குறித்தான தகவல்கள் இதுவரை இல்லை. இந்த வீடியோவில் போலீசார் அவரை ஷு கால்களால் மிதித்து மிகவும் கடுமையாக தாக்கியது பதிவாகியுள்ளது. மடப்புரம் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மக்கள் மீளாத நிலையில் தேனி போலீஸார் பட்டியலின இளைஞர் ஒருவரை தாக்கிய ஆறு மாதங்களுக்கு முன்னால் பதிவான இந்த  சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!