சப்தமே இல்லாமல் கமுக்கமாக ஓடிடியில் வெளியான தக் லைஃப்! ஷாக்கில் ரசிகர்கள்!
Author: Prasad3 July 2025, 10:47 am
படுதோல்வியடைந்த தக் லைஃப்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியான “தக் லைஃப்” திரைப்படம் மிகவும் மோசமான வரவேற்பை பெற்றது. படத்தின் கதையம்சத்திலும் திரைக்கதை வடிவமைப்பிலும் சுவாரஸ்யம் அறவே இல்லை என விமர்சனங்கள் எழுந்தன.

“நாயகன்” திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னம்-கமல்ஹாசன் காம்போ மீண்டும் இணைந்ததால் “தக் லைஃப்” திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்போடு திரையரங்கத்திற்குச் சென்ற ரசிகர்கள் ஏமாந்துப்போய் வெளியே வந்தனர். இத்திரைப்படம் ரூ.300 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படத்தின் மொத்த வசூலே ரூ.90 கோடியை தாண்டவில்லை. இவ்வாறு இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மிகவும் மோசமான வசூலை பெற்ற திரைப்படமாக ஆன “தக் லைஃப்” திரைப்படம் வெளியான 4 வாரங்களில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

8 வாரங்கள் ஒப்பந்தம்
“தக் லைஃப்” திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு இத்திரைப்படம் 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும் என நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திடம் கமல்ஹாசன் ஒப்பந்தம் போட்டிருந்தார். ஆனால் இத்திரைப்படம் படுதோல்வியடைந்த நிலையில் 4 வாரங்களில் வெளியிட்டுக்கொள்ளலாம் என கமல்ஹாசன் ஒப்புதல் அளித்ததாக செய்திகள் தெரிவித்தன. அந்த வகையில் தற்போது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் “தக் லைஃப்” காணக்கிடைக்கிறது. சப்தமே இல்லாமல் கமுக்கமாக இத்திரைப்படம் நெட்ஃபிலிக்ஸில் வெளியானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.