ஸ்ரீகாந்துக்கும் கிருஷ்ணாவுக்கும் ஜாமீன் கூடாது- கறார் காட்டிய காவல்துறை! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்?
Author: Prasad8 July 2025, 5:21 pm
போதை பொருள் வழக்கில் கைதான நடிகர்கள்
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் பிரசாத்திடம் இருந்து போதைப் பொருள் வாங்கியதாக தெரியவர, நடிகர் ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்த நிலையில் கிருஷ்ணாவையும் போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் இருவமே ஜாமீன் கோரி மனு அளித்திருந்த நிலையில் சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் இவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் ஜாமீன் கோரி மனு அளித்திருந்தனர்.

நிபந்தனை ஜாமீன்
இந்த நிலையில் நேற்று இவர்களின் ஜாமீன் மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான வக்கீல், “நடிகர் ஸ்ரீகாந்திடம் இருந்து போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை” என வாதாடினார். மேலும் நடிகர் கிருஷ்ணா தரப்பில் வாதாடிய வக்கீல், “நடிகர் கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை” என வாதாடினார்.
இதனை தொடர்ந்து காவல்துறை தரப்பில், “இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே ஸ்ரீகாந்தும் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என கூறப்பட்டது. இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இது குறித்த உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என கூறினார். அதன் படி இன்று சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.