ஓடும் ரயிலில் கழிவறைக்கு சென்ற பெண்.. உதவிக்கு யாரும் இல்லாததால் கொடூரம்… துடிதுடித்து பலியான சோகம்!
Author: Udayachandran RadhaKrishnan31 July 2025, 12:53 pm
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ், பால் பண்ணை நடத்தி வருகிறார். அவரது மனைவி ரோகிணி (வயது 30), சமீபத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்திருந்தார்.
இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. ராஜேஷின் தந்தை சென்னையில் வசிப்பதால், அவரைச் சந்திக்க தம்பதியர் தங்கள் குழந்தையை உறவினர்களிடம் விட்டுவிட்டு, திருவனந்தபுரம் விரைவு ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சென்னைக்குப் புறப்பட்டனர்.
பயணத்தின் போது, ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்றபோது, ரோகிணி கழிவறைக்குச் சென்று முகம் கழுவிக்கொண்டிருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
இதனால் பதறிய ராஜேஷ், ரெயிலின் பல்வேறு பெட்டிகளில் தேடியும் அவரைக் காணவில்லை. ரெயில் காட்பாடியை நெருங்கிய நிலையில், சந்தேகமடைந்த ராஜேஷ் உடனடியாக ரெயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ரெயில்வே காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில், தண்டவாளத்தில் பெண் ஒருவரின் உடல் கிடப்பது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடை மற்றும் அடையாளங்களை வைத்து உடல் ரோகிணியுடையது என உறுதிப்படுத்தினர். ரெயிலில் இருந்து தவறி விழுந்ததால் அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்பகுதி சாட்சிகளின் கூற்றுப்படி, ரோகிணி தவறி விழுந்த பின்னர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு செல்ல முயன்று நடந்து சென்றதாகவும், ஆனால் உதவி கிடைக்காததால் தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்ததாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் ரோகிணியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவரை நேசித்தவர்களிடையே பேரதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
