வெற்றிமாறனை போட்டு பந்தாடிய எதிர்ப்புகள்? தயாரிப்பு நிறுவனத்தை மூட இதுதான் காரணமா?
Author: Prasad2 September 2025, 6:15 pm
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் “கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி” என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இதன் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வந்த வெற்றிமாறன் சமீபத்தில் “மனுஷி”, “பேட் கேர்ள்” போன்ற திரைப்படங்களை தயாரித்திருந்தார்.
இந்த இரண்டு திரைப்படங்கள் உருவாகி பல மாதங்கள் ஆகிறது. இதில் “மனுஷி” திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளும் வசனங்களும் ஆட்சேபகரமாக உள்ளதாக கூறி சென்சார் போர்டு இத்திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தது.

இதனை தொடர்ந்து “மனுஷி” திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் வெற்றிமாறன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் “மனுஷி” திரைப்படத்தை பார்த்தார். சில காட்சிகளையும் வசனங்களையும் மட்டும் மாற்றியமைத்து இரண்டு வாரங்களில் விண்ணப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

அதனை அடுத்து “பேட் கேர்ள்” திரைப்படத்தில் சிறுவர்களை குறித்த ஆபாச காட்சிகள் இருப்பதாக கூறி புகார் எழுந்த நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் இத்திரைப்படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

இவ்வாறு இரண்டு திரைப்படங்களும் வெற்றிமாறனை போட்டு பந்தாடிய நிலையில் சமீபத்தில் “பேட் கேர்ள்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வெற்றிமாறன், தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனியை மூட முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். “இனிமேல் படம் தயாரிக்கப்போவதில்லை” எனவும் அவர் கூறியது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
