சடலமாக வந்த தயாரிப்பாளர் விவகாரத்தில் திருப்பம்.. அத்தனையும் பொய் : எதிர்தரப்பினர் பரபர புகார்!
Author: Udayachandran RadhaKrishnan11 September 2025, 2:12 pm
கோவையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரான் சஞ்சய்குமார் ரெட்டி கடந்த ஆண்டு பேசஸ் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை கேரள மாநிலம் கொச்சினில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு மனைவியுடன் லண்டன் சென்றதாக கூறப்படுகிறது.
சில தினங்கள் கழித்து படத்தின் பணிகள் குறித்து சஞ்சய் ஆய்வு செய்த போது, நிறுவனத்தில் பணிபுரிந்த ரமேஷ் என்பவர் அந்த திரைப்படத்தின் இயக்குநர் நீலேஷ் கலாய்ச்சி, சாலச்சித்திரம் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராஜேஷ், கோவை புதூர் பகுதியை சேர்ந்த முருகேசன், திருச்சி மாவட்டம் பொன்மலையை சேர்ந்த ஆரோக்கியராஜ் ஆகியோருடன் சேர்ந்து சஞ்சய் இறந்து விட்டதாக போலி ஆவணம் தயாரித்து படத்தை அங்காளம்மன் பிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்து விட்டதாக சஞ்சய்குமார் ரெட்டி கேரள டிஜிபியிடம் புகார் அளித்தார்.
மேலும் தனக்கு ஒரு மர்ம நபர் செல்போனில் அழைத்து புகாரை வாபஸ் பெற வேண்டும் இல்லையென்றால் கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விட்டதாகவும், மகளையும் கடத்தி விடுவோம் என மிரட்டியதாக செல்போன் உரையாடல் ஆடியோவை வெளியிட்டு தமிழக டிஜிபி, கோவை மாவட்ட ஆட்சியர், கேரளா டிஜிபி யிடம் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக சஞ்சய் அளித்த புகாரின் பேரில், நீலேஷ், ராஜேஷ், முருகேசன், ஆரோக்கியராஜ் ஆகியோரை கேரள போலிசார் தேடி வரும் நிலையில் சஞ்சய்குமார் ரெட்டி கூறியது அனைத்தும் பொய் என சஞ்சய்குமார் குற்றம் சாட்டிய ராமேஷ், முருகேசன், ஆரோக்கியராஜ் ஆகியோர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
சஞ்சய்குமார் தங்கள் மீது சாட்டிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் எனவும் அவருக்கு மகளே கிடையாது, அவரே ஒரு ஆளை வைத்து அவருக்கு அவரே மிரட்டல் விடுத்து அதனை கொண்டு எங்கள் மீது பொய் புகார் அளித்துள்ளதாக அவர்கள் கூறினர்.

அவர் முதலில் எங்களுக்கு அறிமுகம் ஆகும்போது தன்னுடைய படத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறி எங்கள் பணத்தை வாங்கியதாகவும் படத்தில் குறிப்பிட்ட சதவீத பணிகள் மட்டுமே முடிந்த நிலையில் அவர் விட்டுவிட்டு சென்றதால் நாங்கள் எங்கள் பணத்தை மீண்டும் செலவிட்டு படத்தின் பணிகளை முடித்ததாகவும், அந்த படத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில் எங்கள் பணத்தை தராமல் அவர் ஏமாற்றுவதாக கூறினர்.

மேலும் சஞ்சய் மீது மோசடி புகார்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் இருப்பதாகவும் கூறிய அவர்கள் சஞ்சய் மற்றும் அவரது மனைவி லாவண்யாவும் பல்வேறு பெயர்களில் மோசடி செய்துள்ளதாக கூறினர்.
