எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. விஜய்க்கு வாழ்த்துகள் : அதிமுக கூட்டணியில் இருந்து அடுத்த கட்சி அவுட்?
Author: Udayachandran RadhaKrishnan11 September 2025, 4:11 pm
தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக
புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை. ஜெகன்மூர்த்தி வருகை தந்தார்.
தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், அதிமுக ஒன்றினைய வேண்டும் என்று கூட்டணி கட்சியினர் கூறுகின்றனர். நீங்கள் கூறுவது என்ன? அதிமுக நிர்வாகிகளிடம் இது குறித்து பேசினீர்களா என்று கேள்விக்கு? கூட்டணி வேற, உட்கட்சி விவகாரம் வேற, உட்க்கட்சி பிரச்னையை அவர்கள் பேசி தீர்த்துக் கொள்வார்கள். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.
அவர்கள் ஸ்ட்ராங்காக இருந்தால் நல்லது. ஒரு கட்சியில் இருந்து வெளியே செல்கிறார்கள் என்றால் அவர்கள் ஒன்றாக சேர வேண்டும் என்பதுதான் அனைவரும் நினைக்கக் கூடியது. கட்சியை பலப்படுத்த வேண்டும், பலமாக இருக்க வேண்டும் என்பதை நினைக்கக் கூடியது இயல்புதான். பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் பலம் தான். ஆனால் அது அவர்கள் கட்சியின் முடிவு.
எந்த கட்சியும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறுவது இயல்பு தான். விஜய், சீமான், திமுக போன்ற அனைத்து கட்சிகளும் கூறுகிறது. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். தற்போது ஆளுங்கட்சி மேல் அதிருப்தி இருக்கிறது. அது யாருக்கு ஓட்டு வங்கியாக மாறுகிறது என்று தெரியவில்லை. அதிமுக தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்கள். ஆகவே அதிமுகவிற்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும். விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றார். அவர் எத்தனை நிமிடம் பேச இருக்கின்றார் என்பதை போலீசார் கூற முடியாது. பாதுகாப்பு குறித்து மட்டும் தான் போலீசார் பேச வேண்டும்.
எதிர்க்கட்சிகளை ஒடுக்க வேண்டும் என நினைப்பது இயல்புதான். அதனை காவல்துறை மூலமாகத்தான் அவர்கள் செய்வார்கள். இருந்தாலும் விஜய்யின் சுற்று பயணம் வெற்றி பெற வேண்டும் என்று புரட்சி பாரதம் வாழ்த்துகிறது.
வருங்காலத்தில் விஜயுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேள்விக்கு? அதை தற்போது சொல்ல முடியாது. வருங்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எங்கள் கட்சியுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு என்று விஜய் கூறி இருக்கின்றார்.

இதனை நிறைய பேர் ஆதரித்துள்ளார்கள். பல மாநிலங்களில் இது போன்று நடைமுறையில் இருக்கின்றது. தமிழகத்தில் இது போன்று வந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். இது நல்ல விஷயம் தான்.
அன்புமணி ராமதாசை தந்தை அன்புமணி கட்சியிலிருந்து நீக்கியது குறித்தான கேள்விக்கு? அது அவர்களின் உட்கட்சி விவகாரம். அதில் நாம் தலையிட முடியாது என்றார்
