காவல் நிலையத்துக்கு வந்த 2 பேர் மரணம்.. விசாரணையில் ஷாக்.. திருச்செந்தூரில் அதிர்ச்சி!
Author: Udayachandran RadhaKrishnan20 September 2025, 2:06 pm
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் காவல்நிலையத்திற்குள் இன்று காலையில் ஆண் பெண் இருவர் பூச்சிமருந்தை குடித்து விட்டோம் என்று கூறி காவல்நிலையத்திற்குள் இருந்த போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு அருகே உள்ள குலசேகரன்பட்டினம் சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இருவரும் ஒரே காரில் வந்துள்ளனர். இந்த கார் குலசேகரன்பட்டினம் காவல்நிலையம் அருகே நின்றது.
தொடர்ந்து போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இறந்த ஆண் நபர் திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மகன் தங்கம் (40) என்பது தெரியவந்தது. லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி கஸ்தூரி தேவி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது.
அதேபோல் அவருடன் வந்து இறந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுப்பையா என்பவரின் மனைவி பார்வதி (28) என்றும் அவருக்கும் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது.
இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்ததால் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து என்ன காரணத்திற்காக இவர்கள் பூச்சி மருந்து குடித்தார்கள்? எங்கு குடித்தார்கள்? என்ன காரணத்திற்காக குலசேகரன்பட்டினம் வந்தார்கள்? என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இவர்களை காணாமல் இரு குடும்பத்தினரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்காதல் விவகாரத்தில் இருவர் பூச்சிமருந்து குடித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
