திமுக பிரமுகரின் மகன் செய்த தில்லாங்கடி.. பரபரப்பு மனு கொடுத்த பாதிக்கப்பட்ட நபர்!
Author: Udayachandran RadhaKrishnan22 September 2025, 2:19 pm
காஞ்சிபுரம் மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. அவரின் மகன் கந்தவேலன் என்பவருக்கு சுங்குவார்சத்திரம் கடைவீதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1 ஏக்கர் 13 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அபகரிக்க திமுக கிளை செயலாளரின் மகன் முதல் கொண்டு பலர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது
ஏற்கனவே கந்தவேலன் அவர்களின் நிலத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் ஜி.கே. நாயுடு நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் வெங்கடநாராயணன் என்பவர் போலி ஆவணம் தயாரித்து வரைபடத்தினை மாற்றி பொது அதிகாரம் மற்றும் நிலம் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சந்தவேலூர் ஊராட்சியில் , திமுக கட்சியின் கிளை கழக செயலாளராக, மறைந்த ராஜேந்திரன் அவர்களின் மகன் சுரேஷ் என்பவர் போலி ஆவணங்களை தயார் செய்து கந்தவேலன் அவர்களின் நிலத்தினை அபகரிக்க முயற்சி செய்வதால், கந்தவேலன் அவர்கள் தன்னுடைய இடத்துக்கு பட்டா கேட்டு, மாவட்ட நிர்வாகம் , வருவாய்த்துறை, தாலுகா அலுவலகம், போன்றவற்றில் தொடர்ந்து மனு அளித்து வருகிறார்.
மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் விசாரணையில் இந்த இடம் கந்தவேலனுக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தி உள்ளனர்.
அதேபோல் வருவாய் கோட்டாட்சியர் அவர்களும் , ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றமும் கந்தவேலனுக்கு சொந்தமான இடம் என உறுதிப்படுத்தி உள்ளது.
இப்படிப்பட்ட உத்தரவுகள் கிடைக்கும், மாவட்ட நிர்வாகம் பட்டா அளிக்க மிகவும் காலத்தாமதம் செய்து வருவதாக கந்தவேலு குடும்பத்தினர் புலம்புகின்றார்கள்.
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கந்தவேலன் மற்றும் உறவினர்கள் சுமார் 25 பேர் எங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி மக்கள் நல்லுறவு மையம் வாசலில் தரையில் அமர்ந்து அமைதியான முறையில்
கந்தவேலன் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதைப் பற்றி கந்தவேலன் அவர்கள் கூறும் போது, ஏற்கனவே மாவட்ட குற்றப்பிரிவு எஸ்பி அவர்கள் விசாரணையிலும், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் போன்றவை இந்த இடம் ஏழுமலை மகனாகிய கந்தவேலன் அவர்களுக்கு சொந்தமானது என உத்தரவு அளித்தும் இது நாள் வரையில் பட்டா கொடுக்காமல், மாவட்ட நிர்வாகத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகள் எதையோ எதிர்பார்த்து காலதாமம் செய்கின்றார்கள். பட்டா கிடைக்காததால் நாங்கள் வீடு கட்ட முடியவில்லை , வசிக்க இடமில்லை. வங்கியில் கடன் வாங்க இயலவில்லை. அதனால் தான் நாங்கள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தார்.
