தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!
Author: Udayachandran RadhaKrishnan29 September 2025, 2:25 pm
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை குறித்துப் பேசிய அவர், “ஒரு அமைச்சர் அங்கு தேம்பி தேம்பி அழுகிறார். அவருக்கு நேரடியாக ஆஸ்கர் விருது வழங்க பரிந்துரைக்கிறேன்,” என சாடினார்.
மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றமே நேரடியாக முழுமையான விசாரணைக் குழு அல்லது கமிஷனை நியமிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் சம்பவத்தின் உண்மையான நிலை வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“இந்த நிகழ்வைச் சுற்றி ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. அவற்றின் உண்மை நிலை வெளிச்சமிடப்பட வேண்டும். நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். உடற்கூறு அவசரமாக நடத்தப்பட்டதற்கான காரணத்தையும் வெளிப்படுத்த வேண்டும்,” என அன்புமணி கடுமையாக விமர்சித்தார்.
