விசேஷங்களுக்கு ரெடியாக மூன்றே பொருட்களை கொண்டு வீட்டிலே செலவில்லா ஃபேஷியல்!!!

25 November 2020, 7:42 pm
Quick Share

பியூட்டி பார்லர் சென்றால் தான் அழகாக இருக்க முடியும் என்ற அவசியம் இல்லை. ஆரோக்கியமான உணவுகளை உண்டு, போதுமான அளவில் தூங்கி மனதை ரிலாக்ஸாக வைத்து கொண்டாலே முகம் பொலிவோடு அழகாக இருக்கும். இது அனைவருக்கும் பொருந்தும். அடுத்ததாக இருக்கும் அழகை சரியாக பராமரித்து கொள்வதும் அவசியம். அதற்கு கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டுமோ என நினைத்து விடாதீர்கள். 

நம் வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டே நமது அழகை மெருகேற்றி கொள்ளலாம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த இயற்கை முறையை நாம் டிரை செய்யும் போது எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. செலவும் பெரிசா ஆகாது, அதே சமயம் நமது அழகும் பாதுகாக்கப்படும். அத்தகைய ஒரு எளிய ஃபேஷியலை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். 

இந்த ஃபேஷியல் செய்வதற்கு நமக்கு காபி தூள், கோதுமை மாவு மற்றும் தயிர் ஆகிய மூன்று பொருட்கள் மட்டுமே போதும். பெரும்பாலான வீடுகளில் கட்டாயமாக இந்த மூன்று பொருட்களுமே கிடைக்கும். இப்போது ஒரு சிறிய பவுல் எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒரு தேக்கரண்டி காபி தூள், ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு மற்றும் ஒரு தேக்கரண்டி கெட்டி தயிர் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். 

ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்றாக கலக்கவும். முதலில் உங்கள் முகத்தை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் முகத்தில் பருக்கள் எதுவும் இல்லாத பட்சத்தில் பேஸ்டை உங்கள் முகத்தில் தடவி மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்து கொள்ளவும். மசாஜ் செய்த பின் ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவவும்.

ஒரு வேலை உங்களுக்கு முகப்பரு உள்ளது என்றால் மசாஜ் செய்யும் பகுதியை நீங்கள் தவிர்த்து விடுங்கள். மேலும் ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து தான் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் படிப்படியாக குறைவதை நீங்கள் பார்க்கலாம். இந்த ஃபேஸ் பேக் போடும் போது முகத்தில் எந்தவித மேக்அப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். ஏதேனும் விசேஷங்களுக்கு செல்வதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பு இந்த ஃபேஷியலை போட்டாலே போதும். முகம் பளிச்சென்று ஆகி உங்களுக்கு ஒரு தனி பொலிவு கிடைக்கும்.

Views: - 24

0

0