முகத்தை கெடுக்கும் கருவளையங்கள் நிரந்தரமாக போக நீங்கள் இன்றிலிருந்து செய்ய வேண்டியது இது தான்…!!!

12 January 2021, 8:17 pm
Quick Share

நமது கண்களை சுற்றியுள்ள சருமம் இடங்களை விட மிகவும் மென்மையாக இருக்கும். இந்த இடத்தில் நீரிழப்பு ஏற்படும் போது ரத்த நாளங்களின் மாறுதல்களால் கருவளையம் உண்டாகும். அதே போல அதிகப்படியான திரவம் தேங்கி வீக்கத்தை உண்டாக்கும். இது மட்டும் இல்லாமல் தூக்கமின்மை, வயது முதிர்வு, கஃபைன், மது, அதிகப்படியான இனிப்பு ஆகியவையும் கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையத்திற்கு காரணமாக இருக்கலாம். இதனை சரி செய்வது மிகவும் எளிதான காரியம். கண்களுக்கு குளிர்ச்சியும், ஈரப்பதமும் அளிக்கும் பொருட்களை பயன்படுத்துவதே இதற்கு தீர்வு. அப்படிப்பட்ட சில காய்கறிகள் மற்றும் பழங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

1. தக்காளி:

சருமத்திற்கு தக்காளி எவ்வளவு நன்மைகள் அளிக்கிறது என்பதை முழுமையாக தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஆரோக்கியமான சருமம் இருந்தால் கருவளையமே வராது. தக்காளியில் ஏகப்பட்ட ஆன்டியாக்ஸிடன்டுகள் உள்ளன. மேலும் தக்காளி கண்களுக்கு கீழ் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மென்மையான சருமத்தை பாதுகாக்கிறது. அதே போல ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தக்காளி சருமத்தை காக்கிறது. எனவே உங்கள் உணவில் அடிக்கடி தக்காளி சேர்ப்பது கருவளையத்தில் இருந்து விடுபட உதவும். 

2. வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய் பற்றி சொல்லவே தேவையில்லை. இதில் உள்ள நீர்ச்சத்தானது சருமத்தை எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது. இது சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. கருவளையம் இருப்பவர்கள் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களுக்கு கீழ் வைப்பது மட்டும் இல்லாமல் அதனை உங்கள் உணவிலும் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். 

3. பச்சை காய்கறிகள்:

பிராக்கோலி, கீரை, தைம் போன்ற பச்சை இலை காய்கறிகளில் அதிக அளவு வைட்டமின் K உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் நிற மாற்றம் மற்றும் வீக்கத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மோசமான இரத்த ஓட்டத்தின் விளைவாக பல தோல் பிரச்சினைகள் உண்டாகலாம். இதனை தடுக்கும் ஆற்றல் பச்சை இலை காய்கறிகளுக்கு உண்டு. 

4. வைட்டமின் E:

வைட்டமின் E நிறைந்த உணவுகளை நீங்கள் அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து வர சருமத்தில் ஏற்படும் சருக்கங்கள், வயதான அறிகுறிகள், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதம் மற்றும் கருவளையத்தில் இருந்து தப்பித்து கொள்ளலாம். எள், பாதாம், சூரியகாந்தி விதைகள், கீரைகள் போன்றவற்றில்  வைட்டமின் E நிறையவே உண்டு. 

5. பீட்ரூட்:

பீட்ரூட்டில் காணப்படும் சிவப்பு நிறமி உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றக்கூடியது. அது மட்டும் இல்லாமல் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் வைட்டமின் C, ஃபோலேட், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. இவை கருவளையம் ஏற்படாமல் தடுக்கும் தன்மை கொண்டவை. உங்கள் தினசரி உணவில் 85 கிராம் பீட்ரூட் எடுப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். 

6. நீர்:

இது குளிர்காலம் என்பதால் தண்ணீர் குடிப்பதையே நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். அவ்வாறு இல்லாமல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இது உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி, கண்களுக்கு கீழ் திரவம் சேராமல் பார்த்து கொள்கிறது. 

மேலே கூறப்பட்டுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் தினசரி உணவுப் பட்டியலில் சேர்த்து வந்தால் கருவளையம் வராமல் தடுக்கலாம். அதோடு ஆரோக்கியமான அழகான கண்களையும் பெறுவீர்கள். 

Views: - 9

0

0