தங்கத்தை மிஞ்சும் தக்காளி விலை.. அரசு வைத்த செக்!

Author: Hariharasudhan
9 October 2024, 4:36 pm

தக்காளி கிலோ 100 ரூபாயைத் தாண்டி செல்லும் நிலையில், அரசின் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயம் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை: “யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்” எனச் சொல்வது போன்று, தற்போது தக்காளிக்கு காலம் வந்துள்ளது. ஆம், தக்காளியின் விலை தங்கத்தைப் போன்று ஏற்றம் மட்டுமே கண்டு வருகிறது. தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி உள்ளதாலும், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடாகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதாலும் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை மளமளவென உயர்ந்து வருகிறது. இதன்படி, இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை ஆகிறது. இதனால் சில்லறை விற்பனையில் கிலோ 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. அதேபோல், பெரிய வெங்காயம் 60 முதல் 70 ரூபாய் வரை ஒரு கிலோ விற்பனை ஆகிறது. இதன் காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் பாதிப்படைந்து உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பெரிய வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதிலும், நபர் ஒன்றுக்கு இரண்டு கிலோ தக்காளி மட்டுமே விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கடைகளில் இதர காய்கறிகளும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மசாஜ் சென்டரில் மஜா… களைகட்டிய விபச்சாரம் : சத்தமே இல்லாமல் நுழைந்தே காக்கிச் சட்டை!

மேலும், அரசு சார்பில் வெளியிடப்பட்ட இன்றைய காய்கறிகள் விலைப் பட்டியலின் படி, கிலோ ஒன்றுக்கு உருளைக்கிழங்கு ரூ.43, கத்தரிக்காய் ரூ.30, அவரைக்காய் ரூ.80, முருங்கைக்காய் ரூ.70, இஞ்சி ரூ.130, எலுமிச்சை ரூ.100 மற்றும் கேரட் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தக்காளி மற்றும் வெங்காயம் விலையைக் குறைக்கவும், கட்டுக்குள் கொண்டு வரவும், விலை உயர்வைப் பயன்படுத்தி தக்காளி பதுக்கலைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!