கார்த்தி பட நடிகையிடம் கைவரிசையை காட்டிய டிரைவர்! 27 லட்சத்தை ஆட்டையை போட்ட சம்பவம்?
Author: Prasad16 May 2025, 2:39 pm
ருக்மிணி விஜயகுமார்
இந்தியாவின் மிக முக்கியமான பரதநாட்டிய கலைஞராக வலம் வருபவர் ருக்மிணி விஜயகுமார். இவர் பாரதிராஜாவின் “பொம்மலாட்டம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

குறிப்பாக தமிழில் “ஆனந்த தாண்டவம்”, “காற்று வெளியிடை” போன்ற திரைப்படங்களில் ரசிகர்களை கவரும் வண்ணம் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரை பூட்டாமல் சென்ற ருக்மிணி
பெங்களூருவில் வசித்து வரும் ருக்மிணி கடந்த 11 ஆம் தேதி காலை நடைபயிற்சிக்கு சென்றார். சின்னசாமி மைதானத்தின் நுழைவாயிலில் அவர் தனது காரை பார்க் செய்திருந்தாராம். ஆனால் காரை பூட்ட மறந்துவிட்டாராம். அவர் காரை பூட்ட மறந்ததை அருகில் இருந்த டாக்ஸி டிரைவர் முகமது மஸ்தான் என்பவர் கவனித்துவிட்டாராம்.
அதன் பின் அவர் ருக்மிணியின் காருக்குள் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிவிட்டுச் சென்றுள்ளார். இரண்டு கைப்பைகள், இரட்டை வைர மோதிரம், ரோலக்ஸ் கைக்கடிகாரம், ஒரு வைர மோதிரம் என ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அவர் திருடிச் சென்றுள்ளார்.
தனது பொருட்கள் காணாமல் போனது குறித்து ருக்மிணி போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் அமைந்திருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்து அந்த டாக்ஸி டிரைவர்தான் திருடியவர் என கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் அவரை தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர் போலீஸார். மேலும் ருக்மிணியின் பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை டாக்ஸி டிரைவரிடம் இருந்து கைப்பற்றி ருக்மிணியிடம் பத்திரமாக ஒப்படைத்தனராம். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.