இரத்தப் பரிசோதனையில் வந்த ரிசல்ட்? நடிகர் கிருஷ்ணாவை தொடர்ந்து போலீஸ் வளையத்தில் சிக்கவுள்ள பிரபலங்கள்?
Author: Prasad26 June 2025, 10:57 am
போலீஸ் வலையில் சிக்கிய கிருஷ்ணா
போதை பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள செய்திதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஸ்ரீகாந்தை வைத்து “தீங்கிரை” என்ற திரைப்படத்தை தயாரித்த பிரசாத் என்பவர் அதிமுகவின் முன்னாள் IT Wing நிர்வாகியாக செயல்பட்டவர். நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள மதுவிடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இவரை போலீஸார் கைது செய்தது.
இவரை விசாரித்ததில் பிரதீப் என்பர் இவருக்கு போதை பொருட்களை சப்ளை செய்ததாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பிரதீப்பிடம் விசாரணை நடத்தியபோது, நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் கேட்டதாக கூறி பிரசாத் தன்னிடம் கொக்கைன் வாங்கிச் சென்றதாக வாக்குமூலம் கொடுத்தார். அதன் அடிப்படையில் ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்தனர்.

அவரது இரத்தமாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதனை தொடர்ந்து எழும்பூர் 14 ஆவது பெருநகர உயர்நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து ஸ்ரீகாந்தை ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவின் பெயரும் அடிபட்ட நிலையில் கிருஷ்ணா தலைமறைவானதாக கூறப்பட்டது. சம்மன் அனுப்பிய பிறகும் அவர் ஆஜராகவில்லை. அவர் கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். அந்த தேடலின் முடிவாக நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.
விடிய விடிய விசாரணை
இதனை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவை சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் அவர், தனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதை பொருள் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்ததாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
எனினும் போலீஸார் நடிகர் கிருஷ்ணாவிடம் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் சிக்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவருகிறது. எனினும் கிருஷ்ணா இந்த விவகாரத்தில் இருந்து தப்பிப்பாரா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.