விடைபெற்றார் புனித் ராஜ்குமார்… வழியனுப்ப தயாராகும் கர்நாடகா : மருத்துவமனையில் குவியும் பிரபலங்கள்…144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!!

Author: Babu Lakshmanan
29 October 2021, 2:24 pm
puneeth rajkumar 2 - updatenews360
Quick Share

பெங்களூரூ : கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் காலமான என்ற செய்தி ரசிகர்களுக்கு பேரிடியாக உள்ளது.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் புனித் ராஜ்குமார். மறைந்த முன்னாள் நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனான இவர், தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எனவே, தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது வழக்கம். அந்த வகையில், இன்று காலையில் வழக்கம் போல, ஜிம்மில் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்த புனித் ராஜ்குமாருக்கு, ஒருவிதமான அசவுகரியம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, அவர் பெங்களூரூவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி காலமானார். இது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்களும் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.

மேலும், அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையை ரசிகர்கள் சூழ்ந்து வருவதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு சோனு சூட் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், பெங்களுரூவில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு இருப்பதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான நடிகரின் இறப்பால் கர்நாடகா சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும், அவரது இறுதிச் சடங்குகள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அதேவேளையில், அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

Views: - 639

1

0