தேசிய விருது விழாவில் பேருந்து ஓட்டுநரை நினைவுகூர்ந்த ரஜினி… கைதட்டு மழையில் நனைந்து நெகிழ்ச்சி..!!

Author: Babu Lakshmanan
25 October 2021, 12:58 pm
rajinikanth - updatenews360
Quick Share

டெல்லி : டெல்லியில் நடந்த தேசிய விருது விழாவில் தன்னுடன் பணியாற்றிய சக பேருந்து ஓட்டுநரை நடிகர் ரஜினிகாந்த் நினைவுகூர்ந்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கலைத்துறையில் சிறந்த பங்காற்றியதற்காக திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த்துக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினரான லதா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருது பெற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் மேடையில் பேசியதாவது :- திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. இந்த விருதை எனது குருவும், ஆலோகருமான கே. பாலச்சந்தருக்கு காணிக்கையாக்குகிறேன். இந்த தருணத்தில் அவரை நினைவுகூற கடமைப்பட்டிருக்கிறேன்.

எனது சகோதரரும், தந்தையை போன்றவருமான சத்யநாராயண ராவ், ஆன்மீகம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுத்தார். அதேபோல, கர்நாடகாவில் பேருந்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, என்னுடன் பணியாற்றிய ஓட்டுநர் ராஜ் பகதூர் என்னோட திறமையைப் பார்த்து, திரைத்துறைக்கு செல்ல ஊக்குவித்தார்.

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் தமிழ் மக்களான தெய்வங்களுக்கு நன்றி, ஜெய் ஹிந்த், எனக் கூறி உரையை முடித்தார்.

Views: - 291

2

0