பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை ஆபாசமாக விமர்சித்த சித்தார்த் : டுவிட்டரிலும் வலுக்கும் கண்டனம்…!!
Author: Babu Lakshmanan10 January 2022, 1:10 pm
சென்னை : இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை ஆபாசமாக விமர்சித்த நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்து வருகிறது.
அண்மையில் பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, பாதியிலேயே சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். விவசாயிகள் சிலர் அவர் செல்லும் பாதையை மறித்து போராட்டம் நடத்தியதுடன், பிரதமரை தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் கசிந்தது.
பிரதமர் மோடி செல்லும் பாதை அம்மாநில முதலமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம், எப்படி போராட்டக்காரர்களுக்கு தெரிய வந்தது என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆளும் பஞ்சாப் காங்கிரஸ் அரசுக்கு பெரும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருவதுடன், WeStandwithmodi என்னும் ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் தன் பங்கிற்கு கண்டனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். அதாவது, பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டால், எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது என்று பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்துக்களை குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தப் பதிவுக்கு நடிகர் சித்தார்த் ஆபாசமான வார்த்தைகளால் பதில் அளித்திருந்தார். அவரது பதிவுக்கு டுவிட்டரில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
வழக்கமாக, பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை கூறி வரும் சித்தார்த், ஒரு இந்திய பேட்மிண்டன் வீராங்கனையின் கருத்தை, கருத்தியலாக பார்க்காமல், இப்படி பொதுவெளியில் ஆபாசமான வார்த்தைகளால் விமர்சிப்பதை ஏற்க முடியாது என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.
0
0