மனநல மருத்துவமனையில் மீரா மிதுன்? குற்றப்பிரிவு போலீஸார் சொன்ன அதிர்ச்சி தகவல்!
Author: Prasad12 August 2025, 12:24 pm
பட்டியலினத்தவர் குறித்து அவதூறு!
கடந்த 2021 ஆம் ஆண்டு தனது வீடியோ ஒன்றில் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் நடிகை மீரா மிதுன். இதனை தொடர்ந்து இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியினர் மீரா மிதுன் மீதும் அந்த வீடியோவில் அவருடன் இருந்த சாம் அபிஷேக் என்பவர் மீதும் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் மீரா மிதுனும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மீரா மிதுன் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால் கடந்த 2022 ஆம் ஆண்டு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீஸார் அவரை வலை வீசி தேடி வந்த நிலையில் அவர் டெல்லியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது செய்யப்பட்டார். மேலும் டெல்லியில் உள்ள காப்பகத்தில் அவர் அடைக்கப்பட்டார்.

மனநல மருத்துவமனையில் மீரா மிதுன்?
இந்த நிலையில் மீரா மிதுனின் வழக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் சுதாகர், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் சமர்பித்த அறிக்கையில், “மீரா மிதுன் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரை சென்னைக்கு அழைத்து வர முடியவில்லை. பயணம் செய்யும் அளவுக்கு அவரது உடல் நலம் சீரான பிறகு அவரை சென்னைக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளது நீதிமன்றம்.
