நடிகை ரம்யாவுக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய பிரபல நடிகரின் ரசிகர்கள்! இணையத்தை அதிரவைத்த சம்பவம்?
Author: Prasad28 July 2025, 12:36 pm
தனது ரசிகரையே கொலை செய்த நடிகர்?
கன்னட திரை உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் தர்ஷன். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு தர்ஷனின் ரசிகரான ரேணுகா சாமி என்பவர் கொலை செய்ப்பட்டார். இந்த கொலையில் நடிகர் தர்ஷனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
தர்ஷனுக்கு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் 2003 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார். இதனிடையே தர்ஷன் பவித்ரா என்ற பெண்ணுடன் பழகி வருவதாக கூறப்பட்டது. ஒரு நாள் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி, தனது கணவர் தர்ஷன் மற்றும் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு “This is us with our one and only” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து பவித்ரா தர்ஷனுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு “One decade down, Forever to go” என்று பதிவிட்டு இருந்தார். இதனால் கடுப்பான விஜயலட்சுமி, பவித்ராவை வெளிப்படையாக சாடினார். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து தனது விருப்பத்திற்குரிய நடிகரின் மனைவியான விஜயலட்சுமி, பவித்ராவால் துன்பத்திற்கு ஆளாவதாக நினைத்துக்கொண்டு அதனை பொறுக்க முடியாத தர்ஷனின் ரசிகர் ரேணுகா சாமி, பவித்ராவின் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்துதான் ரேணுகா சாமி கொலை செய்யப்பட்டுள்ளார். தனது தோழியை ஆபாசமாக திட்டியதன் காரணமாகத்தான் தர்ஷன் ஆட்களை கொண்டு ரேணுகா சாமியை கொலை செய்ததாக கூறப்பட்டது.
ஆபாசமாக மெசெஜ் அனுப்பிய தர்ஷனின் ரசிகர்கள்
இந்த நிலையில் ரேணுகா சாமி கொலை வழக்கில் தர்ஷன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த ஜாமின் உத்தரவை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இது குறித்து பிரபல நடிகையும் காங்கிரஸின் முன்னாள் எம்பியுமான திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ரேணுகா சாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும்” என பதிவிட்டார்.
இதனால் தர்ஷனின் ரசிகர்கள் பலர் கோபத்திற்குள்ளானதாக தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து தர்ஷனின் ரசிகர்கள் சிலர் நடிகை ரம்யாவுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய தர்ஷனின் 11 ரசிகர்களின் பெயர்களையும் அவர்கள் அனுப்பிய மெசேஜ்களையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரங்கமாக பகிர்ந்துள்ளார் ரம்யா. மேலும் அப்பதிவில், “இவர்களை போன்றவர்கள்தான் பெண்களை வன்கொடுமை செய்கிறார்கள்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்யா. இவர் அர்ஜுனின் “குத்து” என்ற படத்தில் திவ்யா என்ற பெயரின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் தமிழில் “பொல்லாதவன்”, “தூண்டில்”, “வாரணம் ஆயிரம்” போன்ற பல திரைப்படங்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
