விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!
Author: Prasad21 April 2025, 12:20 pm
அஜித்தும் கார் ரேஸும்
அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான் என ஒரு வதந்தியே உள்ளது. அந்தளவுக்கு கார் பந்தயத்தில் அஜித்குமாருக்கு அளவுகடந்த ஈடுபாடு உண்டு. தனது கார் பந்தய வரலாற்றில் பல விபத்துகளை கடந்து வந்தபோதும் மனம் தளராமல் இப்போதும் கார் பந்தயத்தை சினிமாவையும் தாண்டி காதலித்து வருகிறார் அஜித்.

மூன்று மாதங்களுக்கு முன்பு கூட துபாயில் நடந்த ஒரு கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. அதனை மிகவும் உற்சாகத்துடன் தனது அணியுடனும் குடும்பத்துடனும் கொண்டாடினார் அஜித்குமார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு உலகளாவிய கார் பந்தயத்தில் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார் அஜித்குமார்.
விபத்துக்கு கிடைத்த வெகுமதி
அதாவது பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற Spa-Francorchamps என்ற சர்வதேச கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி இரண்டாம் இடத்தை வென்றுள்ளது. இப்போட்டிக்கான பயிற்சியில்தான் அஜித்குமார் இரண்டு நாட்களுக்கு முன்பு விபத்தை சந்தித்தார். எனினும் அவர் அந்த விபத்தில் எந்த வித காயமும் இன்றி தப்பித்தார்.
இப்போது அப்போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் அஜித்குமாரின் அணி சாம்பைன் உடைத்து தங்களது வெற்றியை கொண்டாடியது. அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியும் வருகின்றன.
அஜித்குமார் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த இயக்குனருடன் கைக்கோர்க்கவுள்ளார் என்பதுதான் தற்போது கோலிவுட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனினும் அஜித்குமார் தற்போது தீவிரமாக கார் பந்தயங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டுதான் இது குறித்து முடிவெடுப்பார் என கூறப்படுகிறது.