என்னது விஜய்க்கு வில்லனா? அருண் விஜய் தரப்பில் விளக்கம்!

20 January 2021, 5:07 pm
Quick Share

தளபதி 65 படத்தில், விஜய்க்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு அவரது தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிகில் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாஸ்டர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, நாசர், சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், கௌரி கிஷா, பிரிகிதா, பூவையார், ரம்யா சுப்பிரமணியன், சாய் தீனா, ரமேஷ் திலக், அருண் அலெக்சாண்டர், மகாநதி சங்கர் என்று ஏராளமான பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளன.

பல பிரச்சனைகள், போராட்டங்களை சந்தித்த மாஸ்டர் படம் ஒருவழியாக கடந்த 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு மாஸ்டர் படம் திரைக்கு வந்துள்ளது. அதோடு, திரையரங்குகள் திறக்கப்பட்டதும் வெளியான மாஸ் படம் என்பதால், மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு. குறிப்பாக குடும்ப பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு வந்தது. என்னதான், 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகியிருந்தாலும்,

பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுக்குமா? என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. ஆனால், அதையெல்லாம் உடைத்தெறியும் வகையில் வெறும் மூன்றே நாட்களில் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. அதோடு, 3 நாட்களில் ரூ.100 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 6 நாட்களில் ரூ.90 கோடி வசூல் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய், தளபதி65 படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார் என்பதெல்லாம் ஏற்கனவே வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு. இந்த மாத இறுதிக்குள் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாக இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதத்தில் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்க இருக்கிறது. தளபதி65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே, தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், விஜய்க்கு வில்லனாக நடிப்பது குறித்து வெளியான தகவல் குறித்து அருண் விஜய் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தளபதி65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது. அருண் விஜய் நடிப்பில் தற்போது அக்னி சிறகுகள், பாக்ஸர் மற்றும் சினம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில், இந்தப் படங்கள் திரைக்கு வர இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0