போஜ்புரி நடிகை அனுபமா பதக் தற்கொலை..! மும்பையை உலுக்கும் மர்ம மரணங்கள்..! விடை கிடைக்குமா..?

7 August 2020, 9:49 am
Anupama_Pathak_UpdateNews360
Quick Share

போஜ்புரி திரைப்பட நடிகை அனுபமா பதக் மும்பையின் தஹிசார் புறநகரில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 40 வயதான நடிகை அனுபமா ஆகஸ்ட் 2’ஆம் தேதி தனது வாடகை குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மறைந்த நடிகையின் இல்லத்தில் இருந்து தற்கொலைக் குறிப்பு மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அனுபமா பதக் பாட்னாவைச் சேர்ந்தவர். ஆனால் போஜ்புரி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்ற மும்பைக்கு மாறிவிட்டார். தற்கொலை செய்வதற்கு முன், மறைந்த போஜ்புரி திரைப்பட நடிகை ஒரு பேஸ்புக் வீடியோவில் தான் ஏமாற்றப்பட்டதாகவும் யாரையும் நம்ப முடியவில்லை என்றும் பகிர்ந்துள்ளார்.

“நீங்கள் சில சிக்கல்களைச் சந்திக்கிறீர்கள் என்று நீங்கள் ஒருவரிடம் கூறி தற்கொலை செய்து கொண்டால், அந்த நபர் உங்களுக்கு எவ்வளவு நல்ல நண்பராக இருந்தாலும், உடனடியாக உங்கள் பிரச்சினைகளிலிருந்து விலகிக் கொள்ள முயல்வார்கள். அதனால், நீங்கள் இறந்த பிறகு அவர்கள் எந்தவொரு சிக்கலிலும் சிக்கிக் கொள்ள மாட்டார்கள்.

மேலும் மக்கள் உங்களை கேலி செய்வார்கள், மற்றவர்களுக்கு முன்னால் உங்களை அவமதிப்பார்கள். எனவே உங்கள் பிரச்சினைகளை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். யாரையும் உங்கள் நண்பராக ஒருபோதும் கருத வேண்டாம்.” என்று அனுபமா தனது பேஸ்புக் லைவ் வீடியோவில் இந்தியில் கூறினார்.

முன்னதாக ஜூன் 14’ஆம் தேதி இரவு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை, அதன் பிறகு சில நாள் கழித்து அவரின் உதவியாளர் திஷா சலியன் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. சுஷாந்த் சிங் தற்கொலை, உண்மையில் கொலையாகக் கூட இருக்கலாம் என்றும், இதில் மும்பை நிழல் உலக தொடர்புகள் மற்றும் மஹாராஷ்டிர ஆட்சியில் உள்ளவர்களின் தொடர்புகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று மும்பையைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகர் சமீர் ஷர்மாவும் தன்னுடையில் வீட்டில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் பிணமாக கண்டறியப்பட்டுள்ளார். மேலும் கடந்த மே 17’ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த மன்மீத் க்ரேவால், மே 26’ஆம் தேதி இளம் நடிகையான பிரேக்ஸா மேத்தாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக மும்பை சினிமா வட்டாரங்களில் நடக்கும் நடந்துள்ள தற்கொலைகளுக்கு மன அழுத்தம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது என கூறப்படும் நிலையில், மும்பை காவல்துறை இவையனைத்தையும் தற்கொலை எனும் கோணத்திலேயே விசாரணை நடத்தி வருவது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

நியாயமான முறையில் விசாரணை நடந்தால் மட்டுமே இவையனைத்திற்கும் விடை கிடைக்கும்.