குடும்பம் எப்படி நடத்தனும்னு நீ சொல்லித்தராத?- தலைவன் தலைவி படத்தை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்!
Author: Prasad26 July 2025, 12:28 pm
குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம்!
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “தலைவன் தலைவி”. இதில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோருடன் யோகி பாபு, ரோஷினி ஹரிபிரியன், தீபா ஷங்கர், மைனா நந்தினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்திய ஒரு குடும்ப நகைச்சுவை திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது குடும்பத்துடன் பார்க்க கூடிய சிறந்த என்டெர்டெயினர் எனவும் புதிதாக திருமணம் ஆனவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம் எனவும் பாராட்டி வருகின்றனர். ஆனால் இத்திரைப்படத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீ அதை சொல்லித்தர வேண்டாம்?
“தலைவன் தலைவி படத்தின் கதை என்னவென்றால், படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். கல்யாணம் ஆன சில தினங்களிலேயே இருவருக்குள் சண்டை வந்து பிரிந்துவிடுகிறார்கள். அதன் பின் சில நாட்களில் அவர்களே சேர்ந்துவிடுகிறார்கள். மறுபடியும் சண்டை வருகிறது. பிரிந்துவிடுகிறார்கள். மறுபடியும் சேர்ந்துவிடுகிறார்கள்.
மறுபடியும் சண்டை வருகிறது, மறுபடியும் பிரிந்துவிடுகிறார்கள், மறுபடியும் சேர்ந்துவிடுகிறார்கள். மறுபடி மறுபடியும் சண்டை போடுகிறார்கள், மறுபடி மறுபடியும் சேர்ந்துவிடுகிறார்கள். படம் முடிவதற்குள் எப்படியாவது சண்டை போட்டு பிரிந்துவிடுவார்களா என்று பார்த்தால், அதுதான் இல்லை. கடைசி வரைக்கும் சேர்ந்து விடுகிறார்கள். இப்படி ஒரு வித்தியாசமான கதைதான் இப்படத்தின் கதை.
பாண்டிராஜ் படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் பிரிந்தார்கள் என்றால் கிளைமேக்ஸில் என்ன ஹீரோவும் ஹீரோயினும் கொரியன் படத்தில் வருவது போல் இரத்தம் தெறிக்க தெறிக்க வெட்டிக்கொண்டும் குத்துக்கொண்டுமா சாவார்கள்? எப்படியாக இருந்தாலும் சேர்ந்து விடுவார்கள். கேட்டோம் என்றால், குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்கும், சண்டை போடுவார்கள் அதன் பின் சேர்ந்து விடுவார்கள், இதெல்லாம் குடும்பத்தில் நடக்காததா? குடும்ப திரைப்படம் என்றால் அப்படித்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

குடும்ப திரைப்படம் என்றால் சண்டை போடுவார்கள் என நமக்கும் தெரியும். ஆனால் காரண காரியமே இல்லாமல் சண்டை போடுகிறாகள், காரண காரியமே இல்லாமல் சேர்ந்துவிடுகிறார்கள். பைத்தியமா இவர்கள்? அல்லது படம் பார்க்கிற நாம்தான் பைத்தியமா?
படத்தில் குடும்பம் எப்படி நடத்த வேண்டும் என்று மெசேஜ் சொல்லியிருக்கிறார்களாமே என்று இந்த இரண்டு மணி நேரம் படத்தை பார்த்துவிட்டுதான் நீங்கள் குடும்பம் நடத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டிய ஆளாக இருந்தீர்கள் என்றால் கட்டாயமாக இந்த படத்தை பார்த்துவிடுங்கள். நாங்கள் எல்லாம் குடும்பம் நடத்துவது எப்படி என்பதில் PhD முடித்தவர்கள், எங்களுக்கு எல்லாம் நீ சொல்லித்தர தேவையில்லை. முதலில் படம் எப்படி எடுக்கவேண்டும் என்று நீ கற்றுக்கொண்டு வந்து படம் எடு, எங்கள் குடும்பத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று நினைப்பவர் படத்திற்கு போய்விடாதீர்கள்” என “தலைவன் தலைவி” படத்தை விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
