அப்போ இது Casagrand விளம்பரமா? படம் இல்லையா? -3BHK படத்தை கண்டபடி விமர்சித்த பிரபலம்!
Author: Prasad5 July 2025, 4:16 pm
மிடில் கிளாஸ் மக்களின் கனவு!
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “3BHK”. எப்படியாவது ஒரு சொந்த வீடு கட்டிவிட வேண்டும் என்ற ஆசையை சுமந்துகொண்டு வாழும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் எப்படிப்பட்ட துயரங்களை அனுதினமும் சந்திக்கிறது என்பதே இத்திரைப்படத்தின் மையக்கரு.

இதில் சித்தார்த்திற்கு பெற்றோராக சரத்குமார், தேவயானி ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சித்தார்த்திற்கு தங்கையாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியான சமயத்திலேயே இதன் மீது அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் நேற்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இத்திரைப்படம் ஓரளவு பூர்த்தி செய்துள்ளது என்பதே உண்மை.
இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து ப்ளூ சட்டை மாறன் கூறிய விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
இது Casagrand விளம்பரமா?
“இப்படத்தில் சரத்குமார் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலி மேன். அவருக்கு ஒரு பெண், ஒரு பையன். எவ்வளவு கஷ்டப்பட்டாவது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும். அவர்களை ஒரு நல்ல வேளையில் சேர்த்துவிட வேண்டும். எப்படியாவது வாழ்நாளில் சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் எனவும் சரத்குமார் நினைக்கிறார். இந்த ஒரு நியாயமான ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்துடைய கதையே நம்முடன் மிகவும் எளிதாக தொடர்புபடுத்தக்கூடிய கதையாக எழுதி இருக்கிறார்கள். படத்தின் முதல் பாதியில் அதனை முடிந்தளவுக்கு ஒரு நேர்க்கோட்டில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் இவர்களே கதையை குழப்பி வைத்துவிட்டார்கள்.
கதையை விட்டு விலகி எங்கெங்கோ சென்றுவிட்டார்கள். அதுமட்டுமல்லாது இந்த கதையில் ஹீரோ சரத்குமாரா? சித்தார்த்தா? என்ற குழப்பம் வந்துவிட்டது இவர்களுக்கு. படத்தை உண்மைக்கு நெருக்கமாக எடுப்பதாக சொல்லிவிட்டு நாடகம் போல் எடுத்து வைத்திருக்கிறார்கள். அதுவும் அந்த கிளைமேக்ஸ் எல்லாம் பார்க்கும்பொழுது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நாம் இவ்வளவு நேரம் பார்த்தது Casagrand விளம்பரமா என தோன்ற வைத்துவிட்டது. எல்லோருக்கும் கனெக்ட் ஆவது போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுத்துவிட்டு அதனை யாருக்கும் கனெக்ட் ஆகாதபடி படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்” என ப்ளு சட்டை மாறன் “3BHK” திரைப்படத்தை விமர்சித்துள்ளார்.