Final Destination ஓடிக்கொண்டிருந்த திரையரங்கின் மேற்கூரை விழுந்தது உண்மையா? வதந்திக்கு வைத்த முற்றுப்புள்ளி!
Author: Prasad26 May 2025, 1:36 pm
விதி வலியது
ஹாலிவுட் சினிமா ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான திரைப்பட வரிசையாக “Final Destination” திரைப்பட வரிசை அமைந்துள்ளது. இந்த வரிசையில் இதுவரை 5 பாகங்கள் வெளிவந்து உலகம் முழுவதும் மாஸ் ஹிட் அடித்த நிலையில் தற்போது இதன் வரிசையில் “Final Destination Bloodlines” என்ற திரைப்படம் கடந்த மே 16 ஆம் தேதி வெளிவந்தது.
விதி என்று ஒன்று இருந்தால் அது நடந்தே தீரும் என்பதுதான் “Final Destination” திரைப்பட வரிசையில் அமைந்த திரைப்படங்களின் சாராம்சம் ஆகும். இப்படித்தான் நமக்கு மரணம் அமையும் என்பது விதி என்றால் அதை நாம் மாற்றமுடியாது என்பதுதான் இதன் மையக்கரு. இத்திரைப்படத்தில் இடம்பெறும் பல எதிர்பாரா விபத்துக்காட்சிகள் நமது தூக்கத்தை கெடுப்பவை.
அந்த வகையில் “Final Destination Bloodlines” திரைப்படத்திற்கும் அதிகளவு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கம் ஒன்றில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு பெண்மணி காயத்திற்குள்ளானதாக ஒரு செய்தி பரவி வருகிறது.
உண்மை என்ன?
அதாவது அர்ஜென்டினா நாட்டின் லா பிளாடா என்ற நகரத்தில் அமைந்துள்ள ஓச்சோ என்ற திரையரங்கத்தில் “Final Destination Bloodlines” திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததாகவும் இதில் ஒரு பெண்மணி காயமடைந்ததாகவும் திரையரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது போன்ற ஒரு புகைப்படத்துடன் செய்திகள் பரவியது. இந்த செய்தி வைரல் ஆன நிலையில் இணையத்தில் பலரும், “படத்தில் நடப்பது போலவே நிஜத்திலும் நடந்திருக்கிறதே” என்று அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது மேற்கூரை இடிந்து விழுந்தது போல் பரப்பப்பட்ட புகைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் வாசிங்க்டன் நகரில் அமைந்துள்ள லிபர்டி என்ற திரையரங்கத்தில் மேற்கூரை இடிந்து விழந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் அர்ஜென்டினா நாட்டின் ஓச்சோ திரையரங்கத்தில் “Final Destination Bloodlines” திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததாக பரப்பப்பட்ட செய்தி வதந்தி எனவும் தெரிய வந்துள்ளது.