ஒரே நாளில் தியேட்டர் + ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ஜகமே தந்திரம்?

2 February 2021, 2:53 pm
Quick Share

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் ஒரே நாளில் திரையரங்கிலும், ஓடிடி தளத்திலும் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், வடிவுக்கரசி, சௌந்தரராஜா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கடந்தாண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ஜகமே தந்திரம் படம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது திரையரங்கிற்கு ரசிகர்கள் வருவதைத் தொடர்ந்து ஒவ்வொரு படமாக திரைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிராஜின் கபடதாரி படமும் வெளியானது. இதே போன்று தனுஷின் ஜகமே தந்திரம் படமும் திரையரங்கில் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. அதன் பிறகு ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாக இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், நடிகர் தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. மாஸ்டர் படம் வெளியானது போன்று முதலில் திரையரங்கில் வெளியிட்டு அதன் பிறகு ஓடிடி தளத்தில் வெளியிடலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஜகமே தந்திரம் படம் ஒரே நாளில் திரையரங்கிலும், ஓடிடி தளத்திலும் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மதம் தெரிவிப்பார்களா? என்பது கேள்விக்குறி தான்.


ஏற்கனவே மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டால் நஷ்டம் ஏற்படும் என்று கூறிய திரையரங்கு உரிமையாளர்கள் கூடுதலாக 10 சதவிகிதம் ஷேர் கேட்டு மாஸ்டர் தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கு மாஸ்டர் குழுவும், மாஸ்டர் படத்தின் 3ஆவது வார வசூலை விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் பிரித்து எடுத்து கொள்ள அனுமதி வழங்கியதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று தனுஷின் ஜகமே தந்திரம் படத்திற்கும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Views: - 19

0

0